வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Thursday, March 10, 2011

அடுத்த ஆட்சி தி மு க வுக்கு எட்டாக்கனி?


நாளுக்கு நாள் மாறி வரும் அரசியல் நிலைமாற்றம், எதிர் வரும் 2011 ஆம் ஆண்டு சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் தி மு க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்குமா என்ற வினாவைப் பல மட்டத்திலும் எழுப்பியுள்ளது. தி மு க, காங்கிரஸ், பா ம க, விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி, எதிரணியை விட  வலிமையானதாகக் கருதப்பட்டது.
ஓய்விலிருந்து இன்னும்  முழுமையாக வெளிவராத ஜெயலலிதாவின் கூட்டணியில் அ இ அ தி மு க வைத் தவிர, பெரும் ஓட்டு வங்கி உள்ள  பெரிய கட்சி எதுவும் இல்லை. தே மு தி க வை நடிகர் விஜயகாந்த் துவக்கியபோது இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று என்ற நம்பிக்கையில் தே மு தி க -வுக்குப் பொதுமக்கள் அளித்த வாக்குகளே இப்போது அவரையும் கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதாவை நிர்பந்தித்தன என்ற உண்மையை இருவருமே உணரவில்லை. தற்போது அ இ அ தி மு க அணியில் விஜயகாந்த் இருப்பதால் முன்னர் அவருக்கிருந்த பொதுமக்கள் ஆதரவு இப்போதும் கிடைக்குமா என்பது ஐயத்திற்குரியது. விஜயகாந்த் அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் மற்றொரு வைகோ ஆக மாறும் வாய்ப்பே அதிகம்.

வை கோபாலசாமி விஜயகாந்தை விட ஆவேசமாகவும் ஆத்மார்த்தமாகவும் இரு பெரிய திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்தார். "ஜெயலலிதா ஊழல் மகா சமுத்திரம்; கருணாநிதி ஊழலின் ஊற்றுக் கண். சமுத்திரம் வற்றினாலும் ஊற்று நிற்கவே நிற்காது" என இருவரையும் கடுமையாக விமர்சித்தார். 'மிஸ்டர் க்ளீன்' என்ற இமேஜும் இளைஞர்களின் பேராதரவும் வைகோ மீது  நம்பிக்கையை ஏற்படுத்தின. "தடா" எனும் ஆள்தூக்கிச் சட்டத்தின் கீழ்ச் சிறையிருந்த அவரே நாடாளுமன்றத்தில் தொண்டை நரம்புகள் புடைக்க, உணர்ச்சி வயமாக "பொடா" எனும் கறுப்புச் சட்டத்தை ஆதரித்துப் பேசினார். 'செருப்பைத் திருடிச் செருப்பால் அடிபட்டதுபோல்' அவர் ஆதரித்த பொடாவின் கீழ் அவரையே சிறையில் வைத்தார் ஜெயலலிதா.
நல்ல வாய்ப்புக்குக் காத்திருந்த கருணாநிதி, திறமையான காய் நகர்த்தல் மூலம் கோபாலசாமியைத் தம் வயப்படுத்தினார். தி மு க கூட்டணியில் இணைந்தார் வைகோ. அதன் பிறகு, தம் இமேஜும் இளைஞர்களின் ஆதரவும் மங்குவதைத் தாமதமாகப் புரிந்து கொண்ட வைகோ, 'வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதை'யாக ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தார். பின்னர், பழைய கர்ஜனையோ சத்திய ஆவேசமோ இல்லாமல், நெருங்கிய சகாக்களும் கைவிட்டுக் கட்சிமாற, இளைஞர்களின் ஆதரவும் இறங்குமுகமாக, ஜெயலலிதா "பார்த்துப் போட்டுக் கொடுக்கும்" சீட்டுக்களுக்காகக் காத்திருக்கிறார். விஜயகாந்த் நாளை மற்றொரு வைகோ ஆகும் முன் விழித்துக் கொள்ள வேண்டும்.

அ இ அ தி மு க அணியில் உள்ள இரு கம்யூனிஸ்ட்களுக்கும் கட்சி சார்ந்த ஆதரவு இருக்கின்றதே தவிர, பொதுமக்களிடம் ஆதரவு இல்லை. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் செல்வாக்குப் பெற்றிருக்கிறது.  எனவே அ இ அ தி மு க வை அண்டியே இவர்களும் தேர்தலைச் சந்திக்க வேண்டியுள்ளது.

தி மு க அணியில், வடமாவட்டங்களில்  வலிமையான வாக்கு வங்கி உள்ள கட்சிகளான பா ம க, வி சி ஆகியன உள்ளன. மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸும் கூட்டணியில் உள்ளது. 1967 ஆம் ஆண்டிற்குப் பின் தமிழகத்தில் துடைத்தெறியப்பட்ட அக்கட்சி, 1972 முதல் இரு பெரிய திராவிடக் கட்சிகளின் தயவால் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் உறுப்பினர்களைப் பெற்று வந்துள்ளது.  தி மு க வுடனான கூட்டணியில் தமிழகத்தில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் அக்கட்சி, வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் இடும் முட்டுக்கட்டைகள், வரும் தேர்தலில் தி மு க ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு அரிதுதானோ என்ற ஐயத்தைப்  பல மட்டங்களிலும் தோற்றுவித்துள்ளது.

ஆட்சியில் பங்கு, எண்பதுக்கு மேல் இடங்கள் என்று தொடங்கியவர்கள் தங்களின் வலிமையை உணர்ந்துள்ளார்களா எனத் தெரியவில்லை. ராகுல் காந்தியின் வருகையும் இளைஞர் காங்கிரஸாரின் எழுச்சியும் மட்டும் போதுமா? பொதுமக்கள் ஆதரவு வேண்டாமா? பீகாரில் ராகுல் காந்தியின் திட்டத்தால் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டதை இவ்வளவு விரைவில் மறந்து போவார்களா? சோனியாவின் இமேஜ் மட்டும் போதுமா? ஈழத்தமிழருக்குச் செய்த துரோகத்துக்குப் பழிவாங்கத் தமிழ்த்தேசீய அமைப்புகள் காத்திருப்பதைக் காங்கிரஸார்  அறிவார்களா?

தி மு க  அரசின்  மக்கள் நலத்திட்டங்களாலும் இலவசங்களாலும் அக்கட்சிக்கு ஆதரவு கூடியே உள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு எல்லாம், வாக்குச்சாவடிக்கே வராத மேல்மட்ட, படித்த வர்க்கத்தின் விவகாரம். ஆடு, மாடு மேய்ப்பவனும் கடலில் மீன் பிடிப்பவனும் பனையேறுபவனும் கழனியில் உழவுத்தொழில் செய்பவனும், கட்டடம் கட்டும் தொழிலாளியும் பால் விற்பனை செய்பவனும் சிற்றுண்டிச்சாலை ஊழியனும்  முடிதிருத்துபவனும் என, சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருப்போரும் இப்போது எளிதாக செல்ஃபோன் சேவையைப் பெறுவதால், ஸ்பெக்ட்ரம் முறைகேடு என்பது அவர்களுக்குத் தேவையில்லாதது. எனவே காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம், ராசா கைது போன்றவற்றையோ ஸி பி ஐ ரெய்டு போன்றவற்றையோ காட்டி தி மு க வை மிரட்ட நினைத்தால், கருணாநிதியின் தந்திரத்தின் முன் காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது.

காங்கிரஸ் கேட்கும் இடங்களைக் கருணாநிதி கொடுத்தாலும், அவர்களுக்குள் உள்ள ஆயிரத்தெட்டு கோஷ்டிகள் உள்ளடி வேலை செய்து, குழி பறித்து, எதிர்கோஷ்டி ஆளை வெற்றிபெற முடியாமல் செய்து விடுவார்கள் என்பதோடு, தி மு கவும் தேர்தல் வேலையை முனைப்பாகச் செய்யாமல் விட்டு விட்டால் ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸ் கனவு கருவிலேயே கலைந்து விடாதா? காங்கிரஸ் உட்காரும் முன்பே படுக்க ஆசைப்படக்கூடாது. மத்தியில் எங்கள் ஆட்சியில் தி மு க அமைச்சர்கள் இருக்கும்போது, தமிழகத்தில் கூட்டணிக் கட்சியான எங்களுக்கும் பதவி வேண்டாமா என அவர்கள் கேட்பது நியாயம் போலத்தோன்றினாலும், தமிழகத்திலிருந்து  காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு தி மு க வே காரணம் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் மடங்கித்தான் போக வேண்டும். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி இனி எப்படிப் பாய்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சி, தி மு க வுடனான கூட்டணியில் கலகத்தை உருவாக்காமல் ஒழுங்காக ஒத்துழைத்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். இல்லையெனில், மீண்டும் தி மு க ஆட்சி என்பது எட்டாக்கனியாகிவிடும் ஆபத்து இருக்கிறது.. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து, பழைய கோலாகலங்கள் மீண்டும் அரங்கேறிவிடக்கூடாது என்பதே பொதுமக்களின் விருப்பம். இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக காங்கிரஸ் நடந்து கொண்டால் நஷ்டம் அதற்குத்தானே தவிர தி மு க விற்கு இல்லை. தி மு க மீண்டும் ஒரு தேர்தலில் ஆட்சிக்கு வரலாம்; ஆனால் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் காணாமல் போய்விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

0 comments:

Post a Comment