வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Thursday, November 28, 2019

36 ஆண்டுகள் தனது நடிப்புத் திறமையால் வில்லனாக கோலொச்சியவர்..


சென்னை: தமிழ் சினிமாவில் 36 ஆண்டுகள் தனது நடிப்பு திறமையால் கோலொச்சிய நடிகர் பாலா சிங்கின் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் பாலா சிங் 1952ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் பிறந்தார். பள்ளி நாட்களிலேயே நடிப்பு மீது தீராத காதல் கொண்ட பாலா சிங், நடிப்புக்கான எந்த மேடை கிடைத்தாலும் அதனை அழகாக பயன்படுத்தி வந்துள்ளார்.

கல்லூரி காலத்திலும் மேடை நாடகங்களில் ஆர்வம் கொண்டார் பாலா சிங். அப்போதே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிப்பு மீது கொண்ட காதலால் கல்லூரி காலத்திலேயே சென்னை தேசிய நாடக பள்ளியில் சேர்ந்து முறையாக நடிப்பு பயின்றார்.
  • மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர், மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். மலையாளத்தில் முதல் படமான மலை முகலிலே தெய்வம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிட்டின.
  • தமிழில் நடிகர் நாசரின் அறிமுகம் கிடைக்க 1995ஆம் ஆண்டு அவர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படத்தில் நடித்தார் பாலா சிங். அந்த படத்தில் அவரது நடிப்பு நல்ல விமர்சனத்தை பெற்றது.
இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் கவனத்தை பெற்றார் பாலா சிங். இதன் பலனாக இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் இந்தியன் படத்தில் கமல்சஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்த பாலா சிங், மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் நடித்திருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலா சிங் பல முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்துள்ளார்.

குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார் பாலா சிங். கடைசியாக நடிகர் ஆர்யா நடிப்பில் வெளி வந்த மகாமுனி படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார். அதுதான் அவர் தமிழில் நடித்த கடைசி படம்.

சினிமாவில் மட்டுமின்றி டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார் பாலா சிங். சூலம், ருத்ரவீணை, நல்ல நேரம், ஆதிரா ஆகிய நான்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

தீவிர சிகிச்சை :

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை அவரது சொந்த ஊரான களியக்காவிளைக்கு உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. பாலா சிங்கின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான பாலா சிங்கின் மரணம் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

0 comments:

Post a Comment