ஏக உற்சாகத்திலிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வரும் பிப்ரவரி 22-ம் தேதி மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் நடத்தும் போராட்டத்தில் விஜய் பங்கேற்பதோடு, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதலும் உதவியும் வழங்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டதால், அதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளனர்.
இப்போதே தமிழகம் முழுக்க உள்ள மன்றங்கள் போராட்டத்துக்கு ஆள்சேர்ப்புப் பணியில் இறங்கியுள்ளனர்.
மக்கள் பிரச்சினையில் விஜய் களமிறங்கும் முதல் போராட்டம் என்பதால், ஆட்சியாளர்களை மிரள வைக்கும் அளவுக்கு பலம் காட்ட, பல ஊர்களிலும் உள்ள லோக்கல் பிரமுகர்களிடம் பேசி வருகின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள். அவசியமாக இருந்தால் விஜய்யின் தந்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறாராம்.
இன்னொரு பக்கம் விஜய்யின் இந்தப் போராட்டத்துக்கு ரசிகர்கள் கணிசமான அளவு குவிந்து விடாமல் இருக்க செய்ய வேண்டியவை குறித்து போலீசாருக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாக விஜய் தரப்பிலிருந்தே சொல்கிறார்கள்.
“இது உண்மையா… அல்லது அப்படி ஒரு திட்டம் ஆட்சியாளர்களிடம் இருந்தால், அதை முன்கூட்டியே அம்பலப்படுத்தி போராட்டத்துக்கான தடைகளை அகற்றும் உத்தியா என்று தெரியவில்லை”, என்கிறார்கள் விமர்சகர்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே, அதிமுகவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டையும் விஜய் அறிவிப்பார் என்கிறார்கள். பார்க்கலாம்!