வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Friday, April 22, 2011

கு.மு.க. ஆகிவிட்டதா தி.மு.க.?-காரத்துக்கு கருணாநிதி பதிலடி

சென்னை: திமுக குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்  தின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முரசொலியில் திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

சாதியில் தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு அந்த இழிவான எண்ணத்தை மெய்ப்பிப்பதற்காக கடும் முயற்சியிலே ஈடுபட்டு அதற்காக பூணூலை உருவிக் கொண்டு போர்க் குரல் கொடுத்த கூட்டத்தை எதிர்த்து அய்யா பெரியாரும்- அறிஞர் அண்ணாவும் அறப்போர் ஆயுதங்களை ஏந்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களை தம் அணியில் திரட்டி, தன்மான இயக்கத்தின் விரிவாக்கம் கண்ட போது வர்ணாஸ்ரம வெறி கொண்ட வைதீகப் புரியினர் வெகுண்டெழுந்து பெரியார் மீதும், அண்ணா மீதும் கடுங்கணைகளை- காதால் கேட்க முடியாத சுடுமொழிகளை வீசித் தாக்கி வந்த காலந்தொட்டு- நானும் கவனித்து வருகின்றேன்; உன் போன்றோரும் கவனிக்க தவறியிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளேன்.

அருவறுக்கத்தக்கதும்- ஆபாசமானதுமான அர்ச்சனைகளை உயர் வர்க்கத்தார் என கருதிக் கொண்டிருப்பவர்கள் அன்றும் சரி- இன்றும் சரி - நம்மீது பொழிவதை நிறுத்திக் கொள்ளவில்லை. அவற்றுக்கு மறுப்பு கருத்தாக நாம் எழுதியோ- பேசியோ அவர்களுக்கு விளக்கம் அளிக்கும்போது எந்தவொரு நிலையிலும்- தரம் தாழ்ந்து அவர்களை விமர்சிக்கும் முறையை கையாண்டதில்லை.

எதிர் தரப்பினரின் எரியீட்டிகள் பாயும் போதெல்லாம் எவ்வளவு பவ்வியமாக- பக்குவமாக- பண்பாடு கெடாமல் பழைய உறவுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாமல் துடிக்கும் இளமை வாய்ந்த வாலிபனாக நான் விளங்கிய காலத்திலிருந்து- இன்று வரை மாற்றுக் கட்சித் தலைவர்களை- மாற்று முகாமிலே உள்ள நண்பர்களை - மதிக்கும் போக்கினை துளியளவும் கை விடாமல் கடைப்பிடித்திருக்கிறேன் என்பதும்- இன்னமும் கடைப்பிடித்து வருகிறேன் என்பதும் என் இயல்பு மட்டுமல்ல- என்னை ஆளாக்கிய பெரியார்- அண்ணா ஆகிய இருவரின் வழியில் நடந்து நாம் பெற்றுள்ள வளர்ச்சியுமாகும்.

எதிர் வரிசை இயக்கங்களில் குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மீது- அதன் தலைவர்கள் எனப்படுவோர் சிலர் மீது- எத்துணை வருத்தங்கள் அல்லது கோபங்கள் ஏற்பட்டாலும், அவற்றை வெளிப்படுத்தும் போது- அவர்கள்பால் கொண்டிருக்கும் அன்பையும்- பழைய நட்பையும் என்றைக்கும் நான் மறந்தவனல்லன்.

அண்ணன் ஜீவானந்தம் என்றும்- பெரியவர் மணலி என்றும்- மரியாதை கலந்த அன்பு வைத்தே அவர்களிடம் பழகியிருக்கிறேன். இன்னமும் நல்லகண்ணு போன்றவர்கள் அந்த வரிசையில் தான் என் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த உண்மையும், உயிர்நாடிகளில் ஒன்றாக நாம் ஏற்றுக் கொண்டுள்ள "கம்யூனிசம்'' என்ற கொள்கையும்- என்னை இயக்கிக் கொண்டிருக்கிற குன்றாத குருதியோட்டமாகவே திகழ்வதை அக்கட்சிகளின் நண்பர்கள் பலரும் அறிவார்கள். அத்தகைய நண்பர்களில் ஒருவராகத்தான் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தை நான் கருதியிருக்கிறேன்.

அவர் எனக்கு அறிமுகமான காலத்திலிருந்து இடையிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் எங்கள் நட்பை என்றைக்கும் பாதித்ததில்லை.

திராவிட இயக்கத்தை- பெரியாரை- அண்ணாவை; விபூதி வீரமுத்துக்கள் போன்ற நாராச நடையினர் விமர்சித்துத் தாக்கிய காலத்தை நாம் மறந்து விட முடியாத அளவுக்கு பாண்டியன்களும், ராமகிருஷ்ணன்களும் நரகல் நடையில் நம்மை இழித்தும் பழித்தும் பேசுகிறார்களே என எண்ணும்போது கூட, தோழர் பிரகாஷ் காரத் போன்றவர்கள்- எச்சூரி போன்றவர்கள் அந்த அணியில் இருக்கிறார்களே என்பதை நினைத்து- இவர்களது ஏச்சுப்பேச்சுக்களை தரக்குறைவான தாக்குதல்களை நான் பொருள்படுத்தாமல் இருந்து விடுவதுண்டு.

காரணம் இவர்களையெல்லாம் விட கம்யூனிச கொள்கை மீது என்னை கவர்ந்த அம்சங்கள் பல இருப்பது தான் என்பதை நானே அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் நான் வியப்படைந்து, விழி கலங்கும் நிலையில் படித்த ஒரு செய்தி பிரகாஷ் காரத் பெயராலேயே "தீக்கதிர்'' ஏட்டில் வெளிவந்திருப்பதைப் பார்த்து, திகைத்து திடுக்கிட்டேன்.

"தீக்கதிர்'' ஏட்டில் என்னைப்பற்றியும்- என் தலைமையில் உள்ள கழகத்தைப் பற்றியும் இழிமொழிகள், ஏசல் மொழிகள் வெளிவருவது வழக்கம் தான் என்றாலும், அந்த வழக்கத்திற்கு மாறாக இந்தச் செய்தியின் கர்த்தாவாக நண்பர் பிரகாஷ் காரத் இருப்பது தான் என்னை திடுக்கிட செய்த ஒன்றாகும்.

"மாநில சுயாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகளுக்கு குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கியது தி.மு.க. அத்தகைய பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி மிகவும் தரம் தாழ்ந்து இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்ற கழகமாக மாறி, கொள்ளையடித்த பணத்தை தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது''. இந்த வரிகள் பிரகாஷ் காரத்தால் கூறப்பட்டவை.

அவரது இந்த கூற்றுக்குப்பதில் சொல்ல ஆரம்பித்து குடுமி பிடி சண்டையில் ஈடுபட நான் விரும்பவில்லை. ஏனெனில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கூட அவரும், அவருடன் சில கம்யூனிஸ்டு கட்சி தளபதிகளும் சென்னையில் என் வீட்டிற்கே வந்து கொள்கை அடிப்படையிலான பல கருத்துக்களையும்- இந்திய தேசிய அடிப்படையிலான பல கருத்துக்களையும்- காங்கிரஸ்  கட்சியுடன் உறவு உண்டா இல்லையா- இனியும் நீடிக்குமா- என்பன போன்ற பல கருத்துக்களையும்- அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம்  போன்ற கருத்துக்களையும் மணிக் கணக்கில் உரையாடி விவாதித்திருக்கிறோம்.

ஆனால் அந்த சமயங்களில் என் இதயத்தில் நல்லதோர் இடத்தை பெற்றிருந்த அந்த நண்பர் காரத் இப்போது ஏன் இத்தகைய நச்சு நினைப்பினர் ஆனார் என்பது தான் எனக்கு புரியவில்லை- என்றாலும் நாம் கட்டிக் காத்து வரும் அண்ணாவழி- பெரியார் வழி- பண்பாட்டு சங்கிலியில் ஒரு கரணை கூட தேய்ந்து அறுந்து விடாத அளவுக்கு அந்த நண்பரோடு பழகி வந்திருக்கிறேன். ஆனால் கம்யூனிஸ்ட் ஏட்டில் இந்த வாசகங்கள் அவர் பெயரால் வெளி வந்த பிறகு "அவரா இவர்?'' என்ற கேள்விக்கு பதில் காண முடியாமல் துடித்துத்தான் போகிறேன்.

அவர் எழுப்பியுள்ள "குடும்ப முன்னேற்றக் கழகம்'' என்ற குற்றச்சாட்டுக்கு அவரோடு இணைந்து இயக்க பணியாற்றும் பிருந்தா காரத்தே விடையாகவும், விளக்கமாகவும் விளங்கும்போது அந்த குற்றச்சாட்டை தவிர்த்து- "ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயல்வதை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது''-என்று அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு மாத்திரம் பதில் சொல்ல விரும்புகிறேன்.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கருணாநிதி முயலுவதை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்கிறார் அந்த நண்பர். கொள்கை அடிப்படையில் நானும், என் தலைமையில் உள்ள கழகமும் விடாப்பிடியாக இருந்து இலங்கை பிரச்சனையிலும் - மத்திய மாநில உறவுகள் பிரச்சனையிலும் - "நெருக்கடி கொடுமைக்கு ஈடுகொடுத்து இந்தியாவிலேயே சுதந்திர காற்றை சுவாசிக்கும் இடம் தமிழ்நாடு  தான்'' என்று தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டே சென்னை கூட்டத்தில் பாராட்டிய அளவுக்கு- நானும், என் தலைமையிலே உள்ள கழகமும் நிமிர்ந்து நின்றபோது அதைப் பார்க்காமல் இருந்து விட்டாரே- அல்லது பார்த்தும் இப்போது அதை மறந்து விட்டாரே காரத் என்பதை நினைக்கும்போது தான் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

தமிழகத்தைப் போல்..தேர்தல் ஆணையத்துக்கு காரத் கோரிக்கை: 

இந் நிலையில் தற்போது நடைபெற்றுவரும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் கறுப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு பிரகாஷ் காரத் கோரியுள்ளார்.

தமிழகத்தைப் போல அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டால் அதை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment