இந்தியிலும் சரி, தமிழிலும் சரி ஆசினுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கையில் படமில்லை என்ற போதிலும் அவரது பந்தா பேச்சுக்கு சற்றும் குறைச்சலைக் காணோம்.
தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்து வந்த ஆசின் திடீரென இந்திக்குக் கிளம்பிப் போனார். முதல் படமான கஜினி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், அவருக்கு இந்தியிலும் கதவு திறந்தது. தொடர்ந்து சல்மான் கானுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்டார். கூடவே கிசுகிசுக்களும் படையெடுத்துக் கிளம்பின.
ஆனால் கஜினிக்குப் பிறகு ஆசினுக்கு இந்தியில் பெரியஅளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இடையில் விஜய் கூப்பிட்டார் என்பதற்காக காவலன் படத்தில் நடித்துக் கொடுத்தார்.
காவலன் படம் வெற்றிகரமாக ஓடியதால், ஆசினைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரோ பிரஸ்டிஜ் பார்க்க ஆரம்பித்தார். இந்திக்குப் போய் விட்ட பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்தால் தனது கெளரவம் என்னாகும் என்ற ரீதியில் பேசி வருகிறாராம் ஆசின்.
இதனால் தன்னைத் தேடி வருகிற தமிழ்ப் பட வாய்ப்புகளை அவர் தட்டி வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியிலும் பெருமளவில் வாய்ப்புகள் வராததால் சற்றே டென்ஷனாக இருக்கிறாராம் ஆசின்.
இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அமெரிக்காவில் கூப்பிட்டாக, ஆப்பிரிக்காவில் கூப்பிட்டாக என்ற ரீதியில் பந்தாவாக பேசி வருகிறாராம். தமிழில் நல்ல கதைகள் வந்தால்தான் நடிப்பேன் என்றும் கூறி வருகிறாராம்.
‘அப்பளத்துக்கே வழியில்லையாம், அண்டாச் சோறு கேக்குதாம்’- இந்தப் பழமொழி ஆசினுக்கு பொருத்தமாக இருக்கும்!