சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதையடுத்து, சமச்சீர் பாட வகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளன.

""மாநிலம் முழுவதும் மொத்தம் 86 சதவீத புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 20 சதவீதப் புத்தகங்கள் கிடங்குகளில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக'' அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 முதல் 20 சதவீதம் வரையான புத்தகங்களை அச்சிடுவது, பைண்டிங் செய்வது உள்ளிட்ட பணிகள் இப்போது நடைபெறுகின்றன. பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சமச்சீர் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய 41 பகுதிகளை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, செம்மொழி வாழ்த்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த குறிப்புகள், சென்னை சங்கமம், புதிய தலைமைச் செயலகக் கட்டடம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், தி.மு.க. குறித்த குறிப்புகள் போன்ற பகுதிகளை சமச்சீர் பாட புத்தகங்களில் இருந்து கருப்பு மையிட்டும், ஸ்டிக்கர் ஒட்டியும், கிழித்தும் நீக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தப் பணிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்தன. புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் திங்கள்கிழமையோடு பல பள்ளிகளில் நிறைவடைந்ததாகவும், மாணவர்களுக்குப் புத்தகங்கள் திங்கள்கிழமையே விநியோகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தக விநியோகப் பணிகள் குறித்து அதிகாரிகள் கூறியது:

அரசு உத்தரவைத் தொடர்ந்து 65 கல்வி மாவட்டங்களில் இருந்த சமச்சீர் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இவற்றில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மீதமுள்ள புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. பள்ளிகளுக்கு இந்தப் புத்தகங்கள் வர, வர அவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். ஒரு சில பாடப்புத்தகங்கள் தவிர பெரும்பாலான புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பணிகள் தொடர்பாக தலைமையாசிரியர்கள் கூறியது:

பெரும்பாலான பள்ளிகளுக்கு இதுவரை 50 சதவீத புத்தகங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. ஒரு சில வகுப்புகளுக்கு ஒரு புத்தகம் மட்டுமே கிடைத்துள்ளது. பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகம் விநியோகிக்கப்படவே இல்லை.

பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைதான் ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பப்பட்டன. சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புத்தகங்கள் கிடைத்தவுடன் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வளவு புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யாததே புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்காததற்குக் காரணம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்புக்கு முன்னுரிமை: ""பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் 80 சதவீதம் தயாராக உள்ளன. இந்தப் புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி அச்சடித்துத் தரப்படும். மீதமுள்ள வகுப்புகளுக்கான புத்தகங்கள் 60 சதவீதம் வரை தயாராக உள்ளன. மீதமுள்ள புத்தகங்கள் பல்வேறு நிலைகளில் தயாராகி வருகின்றன. இந்தப் புத்தகங்களை முழுமையாக அச்சிட்டு வழங்க 3 வாரங்கள் வரை ஆகலாம்'' என்று பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரிக் பள்ளிகள்: மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்க 1 மாதம் வரை ஆகும் என்று தனியார் பதிப்பாளர்கள் கூறிவிட்டனர். எனவே, இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்திலேயே புத்தகங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இலவச புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி அச்சிடும் பணி நடைபெற்றது. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் அச்சிட்டு வழங்க மேலும் ஒரு சில நாள்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.