தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு!
தமிழகத்தில் 1,208 திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்ததன் மூலமாக, அரசுக்கு 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழை வளர்ப்பதாக கூறி, பல்வேறு நடவடிக்கைகளை அப்போதைய அரசு எடுத்தது.
தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிப்பது அதில் ஒன்று. ஆட்சி பொறுப்புக்கு வந்த இரண்டு மாதங்களில், இதற்கான அரசாணையை வணிக வரித்துறை (எண்: 72 தேதி: 22-07-2006) வெளியிட்டது.
இதற்காக, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு திரைத்துறையினர் பாராட்டு விழா நடத்த, அதிலே குளிர்ந்து போன கருணாநிதி, மனையிடம் ஒதுக்கீடு, உதவித் தொகை என திரைத்துறையினருக்கு அடுத்தடுத்து பல சலுகைகளை வாரி வழங்கினார். அதனால், மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்பதோடு, திரைத்துறையும் பெரிதாக வளர்ந்து விடவில்லை; தமிழும் தலை நிமிரவில்லை.படத்தின் பெயரில் மட்டும் தமிழை வைத்து கொண்டு, படத்தயாரிப்பு நிறுவனம், பாடல்கள் எல்லாம் ஆங்கில ஆதிக்கத்தில் இருந்தது ஊரறிந்த ரகசியம்.
கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்திய “சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன்,
ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்களின் பெயர்களே இதற்கு சாட்சி. தமிழை வளர்ப்பதற்காக அரசு கொடுத்த சலுகையை பெற, கண்டபடி பெயர் வைத்து சர்வதேச தமிழர்களை தலைகுனிய வைத்தனர் திரைத்துறையினர் பொறுக்கி, போக்கிரி, சண்ட, சிவாஜி,
வ (குவாட்டர் கட்டிங்) என்றெல்லாம் பெயர் வைத்து, பல கோடி ரூபாய் வரி செலுத்துவதிலிருந்து தப்பித்தனர். இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, 2010 டிச., 31 வரையிலும், 1,208 தமிழ் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கேளிக்கை வரி வருவாயில் 90 சதவீதத் தொகை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்று கொண்டிருந்தன என்பதால், இச்சலுகையால் முதல் பாதிப்புக்குள்ளானது உள்ளாட்சி நிர்வாகங்கள் தான்.
270 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் நடந்திருக்க வேண்டிய வளர்ச்சி பணிகள் நடக்காமல் இருந்ததற்கு கருணாநிதியின் சினிமா பாசமே காரணம்.
இது தொடர்பான தகவல்களை, வணிக வரித்துறையிடமிருந்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் வாங்கிய போது, மற்றொரு தகவலும் தெரியவந்தது. இந்த அரசாணை வெளியாவதற்கு முன் வெளியான 44 படங்களுக்கு மட்டும் கேளிக்கை வரி விலக்கு செல்லாது என்பது தான் அந்த தகவல்.
இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன், ஆட்டோ ராஜா ஆகிய படங்களும் இதில் அடக்கம். ரஜினிகாந்த் நடித்த மிஸ்டர் பாரத், லிங்குசாமியின் ரன்,
பாலச்சந்தரின் டூயட், ஷங்கரின் பாய்ஸ் என, பழைய மற்றும் பழங்காலத் திரைப்படங்கள் பலவற்றுக்கும் கேளிக்கை வரி வசூலிக்கப்படுவதாக அத்துறை தெரிவித்துள்ளது.
கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்ட பின்பே, தமிழகத்திலுள்ளதியேட்டர்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது;
புது பட ரிலீஸ் என்றால், தியேட்டரிலேயே எவ்வளவுக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற நிலை உருவானதும் அப்போது தான்.அரசின் வருவாயை பெருக்கியே தீர வேண்டிய கட்டாயத்திலுள்ள தமிழக அரசு, இச்சலுகையை ரத்து செய்து, மீண்டும் கேளிக்கை வரியை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவரங்களை பெற்றுள்ள கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோனும், இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது, கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர்கள் பலரும் “பினாமி பெயர்களில் திரைத்துறையில் பல கோடிகளை கொட்டியுள்ளனர். கேளிக்கை வரியை ரத்து செய்வதால், திரைத்துறையிலுள்ள யாரும் ஏழையாகிவிட மாட்டார்கள். அதே நேரத்தில், அந்த வருவாயை கொண்டு பல லட்சம் ஏழைகளுக்கு உணவளிக்கலாம்; கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.
0 comments:
Post a Comment