வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, December 25, 2010

விருதகிரி- நடு நிலையான விமர்சனம் !

இது விஜயகாந்த் நடித்த படத்தின் விமர்சனம், விஜயகாந்த் பற்றிய விமர்சனம் இல்லை. படிப்பவர்களுக்கு வேறு மாதிரி தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.


அரசியல் பேட்டி, அறிக்கை என்று கலக்கிக்கொண்டு இருக்கும் கேப்டன், படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற 'எதிர்ப்பார்ப்பு' என்பதை நீங்களே புரிந்திகொண்டிருப்பீர்கள்.

கேப்டன் நடித்து இயக்கியிருக்கும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புடன்(?!...) படத்தைப் பார்த்தேன். இதுவரை இந்திய தீவிரவாதிகளை போட்டு சாத்திய கேப்டன், இந்த முறை உலதீவிரவாதிகளை தும்சம் செய்கிறார்.
"காப்டனே வா வா, ஆட்சி மாற்றம் தர வா வா"என்று "நிலா நிலா ஓடிவா" போன்ற டைட்டில் பாடலில் ஆ'ரம்பி'க்கிறது படம்.

டைட்டிலில், "கதை, இயக்கம்...விஜயகாந்த்" என்று வரும்போது தலைமைச் செயலகம் முன்பு Thumps-up காண்பிக்கும் கேப்டன்... வழக்கம்போல இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். (உடை வடிவமைப்பு பிரேமலதா விஜயகாந்தாம்.).

பஞ்ச் டயலாக் படத்தில் ஆங்காங்கே வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் படமே பஞ்ச் டயலாக்காக இப்போதுதான் பார்க்கிறேன். எல்லாக் காட்சிகளிலும் நிறுத்தி நிதானமாக பஞ்ச் வைத்து பஞ்ச்வைத்து ந(டிக்)கர்கிறார். பஞ்ச்-களில் கூடுதல் எஃபெக்ட் வரவேண்டும் என்று அவர் நினைக்கும் இடங்களில் எல்லாம் அவருக்குப் பின்னால் பூகம்பம், சுனாமி எல்லாம் வருகிறது.

முதல் சீனில்- ஸ்காட்லாந்து யார்டில்... என்றவுடன் நாம் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகிறோம். அங்கே அந்த நாட்டுப் பிரதமரைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார். (எத்தனைநாள்தான் லோக்கல் சப்பாத்திப் பிரதமரையே காப்பாற்றிக்கொண்டிருப்பது?) தீவிரவாதி, விஜயகாந்தைக் கண்டு ஓட, அவரை நடந்துசென்று துவம்சம் செய்கிறார். பிறகு என்ன ஸ்ட்காட்லாந்து போலீஸ், "எங்க நாட்டின் பாதுகாப்பு, மற்றும் ஸ்ட்காட்லாந்து யார்ட் மானத்தையும் நீங்க காப்பாத்தீட்டீங்க," என்று நம்மூர் வசனம் பேசுகிறார்கள். இந்த மாதிரி காட்சிகள் இருப்பதால் படத்தில் வடிவேலு, சந்தானம், விவேக் போன்றவர் இல்லாத குறையே தெரியவில்லை.

படம் முழுவதும், ஆஸ்திரேலியாவிலும் சில பகுதிகள் ஸ்காட்லாந்து யார்டிலும் நடப்பதால், ஆங்கில வசனம் வால்யூம் ஒன்றிலும் தமிழ் வசனம் வால்யூம் ஐந்திலும். "Oh! my God, really" போன்ற வசனம் வந்தவுடன் "அடக் கடவுளே, அப்படியா?" என்று பின்னனியில் வருகிறது. கொஞ்ச நேரத்தில் அதுவே ஜெயா டிவியில் ராஜகோபாலன் ஆங்கிலப் பாடத்தைத் தமிழில் எடுப்பது போல ஒரு ஃபீலிங்.

ஸ்காட்லாந்து யார்டில் இந்த வேலையை முடித்துவிட்டு, திரும்ப இந்தியா வரும் அவர் ஏர்போர்ட்டில் மீடியாவிற்குப் பேட்டி கொடுக்கிறார்-- "வாழ்க்கை ஐஸ்கீர்ம் மாதிரி, அது உருகுவதற்கு முன்பு நாம் சாப்பிடவேண்டும்... புகழுக்குகாக நாம் அது பின்னால் அலையக் கூடாது. புகழ்தான் நம்மைத் தேடி வரவேண்டும்..." இதற்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர் இவரை ஏதோ பாராட்ட, கேப்டன், "நான் என் கடமையை தானே செய்தேன்...." என்று கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்பான எம்ஜிஆர் வசனத்தைச் சொல்ல-- அதற்கு அந்தப் பத்திரிகையாளர் "அவனவன் பாராட்டுவிழாவே வருஷக்கணக்கா நடத்துறாங்க நீங்க என்னடா என்றால்.." என்று எடுத்துக்கொடுக்க--- கேப்டன் "... நம் நாட்டில் பசிக்கும் பஞ்சம் இல்லை; பாராட்டுவிழாவிற்கும் பஞ்சம் இல்லை..." இத்யாதிகளுடன் முடிக்கிறார். "ஏன் சார் உங்களுக்கு பயமே இல்லையா?" என்று இன்னொருவர் கேட்க, "என்னை யாரும் மிரட்ட முடியாது" என்று விரலை ஆட்டி மிரட்டுகிறார். க்ளோசப்பில் பார்க்க நமக்குத்தான் பயமாக இருக்கிறது.

ஏர்போர்ட்டிலிருந்து காரில்வரும் கேப்டன், இடதுபக்கக் கதவை திறந்து இறங்குகிறார். உடனே அடுத்த ஷாட்- வலதுபக்கக் கதவையும் திறந்து இறங்குகிறார். என்னது, டபுள் ஆக்டா என்று ஒரு நொடி நாம் குழம்ப, அது அதிரடி ஷாட் மாதிரி காண்பிக்க எடிட்டரின் கைவண்ணம் என்று புரிகிறது. தொடர்ந்து வீட்டில் அம்மா, அப்பா அவரிடம், நீ தான் அடுத்த முதல்வர் ரேஞ்சில் பேசிக்கொண்டே போக... முடியலப்பா...

இதற்குப் பிறகு ஒரு பாட்டு- ஐபிஎஸ் ஆபிஸர் தேர்தல் பிரசாரம் செய்யும் பாட்டு. அதை அப்படியே ஸ்கிப் செய்தால் பிறகு வழமையான ஒரு சினிமா ரவுண்ட் டேபிள், சுற்றி போலீஸ் இருக்கிறார்கள். உங்களுக்கே தெரிந்திருக்குமே ஒரு பிரொஜக்டரில் திவிரவாதிகள் பற்றியோ வில்லன் பற்றியோ ஸ்லைட் ஷோ காண்பிப்பார்கள், உடனே அங்கே ஹீரோவாக இருக்கும் போலீஸுக்கு, அந்த வேலையை "ஆல் தி பெஸ்ட்" சொல்லிக் கொடுப்பார்கள். அவரும் அது சம்பந்தப்பட்ட(?!) ஒரு ஃபைலை வாங்கிக்கொண்டு, சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டு நகர்வார். இங்கே ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாணவர் மீதான தாக்குதலில் இருக்கும் பின்னணியைப் போட்டு அலசுகிறார் நம் கேப்டன். அவ்வப்போது கண்ணைக் கொட்டிக்கொண்டு பேசும்போது சிரிப்புதான் வருகிறது.

விஜய்காந்த் வீட்டில் ப்ரியா(மாதுரி இடாகி) என்ற பெண்மணி இருக்கிறார். இவர் தான் ஹீரோயினா என்று நாம் நினைக்கும் போது இவர் விஜயகாந்தை அங்கிள் என்று கூப்பிட்டு நம் வயிற்றில் பாலை வார்க்கிறார்; இல்லாவிட்டால் இவருடன் விஜய்காந்த் ஆடும் டூயட்டை யார் பார்ப்பது? படத்தில் ப்ரியாவின் அம்மாவாக டிவி புகழ் உமா நெற்றியில் வீபூதியுடன் வருகிறார். இவர் விதவை ஆனதற்கு ஏதாவது ஃபிளாஷ் பேக் வரும் என்று நானும் கடைசி வரை பார்த்தேன் ஆனால் வரவில்லை. ஒரே ஆறுதல்.

இதற்குள் திருநங்கைகளைக் கடத்திக் கொலை செய்து, அவர்களின் உடல் உறுப்புகளை வெளிநாடுகளில் விற்கும் கும்பலை கேப்டன் வழக்கம் போல் தனி ஆளாக அடித்து உதைக்கிறார். அடித்துவிட்டு நான் மக்களுடைய போலீஸ் என்று சொல்ல அதற்கு "அரசாங்க அதிகாரியா இருக்கறப்பவே இவ்வளவு நல்லது பண்றீங்களே, அரசாங்கமே உங்க அதிகாரத்துக்கு வந்துட்டா?" போன்ற வசனங்களை கேட்டுக் கேட்டு டயர்ட் ஆகிப் போகிறோம். பின்ன இந்த வசனம் மூன்று முறை படத்தில் வருகிறது என்றால் ? நல்லவேளையாக, "இந்த விருதகிரி Gunனும் கண்ணும் வைத்தால் குறி தப்பாது.." என்ற வசனத்துடன் ஒரு திருப்பம் வருகிறது.

ப்ரியா மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா போக அங்கே அவரை ஒரு கும்பல் கடத்துகிறது. இதற்குப் பிறகு டேக்கன்(Taken) என்ற ஆங்கிலப் படத்தை விஜய்காந்த் சீனுக்கு சீன் ரீமேக் செய்கிறார். அங்கேயும் தன் பஞ்ச்-ஐ மட்டும் விடவில்லை.

ஆங்கிலப் படங்களை தமிழில் டப் செய்வது போல இந்தப் படத்தை ஆங்கிலத்தில் டப் செய்தால் டேக்கன் படம் கிடைக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் [என்ன, கொஞ்சம் நகைச்சுவை தூக்கலாக இருக்கும் :-)]

மன்சூர் அலிகான் மாதிரி லோக்கல் ரவுடியாக இருந்தாலும், அருண்பாண்டியன் மாதிரி கொஞ்சம் மேல்தட்டு ரவுடியாக இருந்தாலும், வெளிநாட்டுத் வெள்ளை தீவிரவாதியாகவே இருந்தாலும் கேப்டன் அவர்களை கலைஞர் என்றே நினைத்து அவர்களிடம் அரசியல் வசனம் பேசுவது சூப்பர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு சில்லரை வில்லனிடம் உண்மையை விசாரிக்க ஷாக் கொடுக்கும் சீனில், "எங்க ஊர் மாதிரி மின்சார வெட்டு இல்லாம இங்கே 24 மணி நேரமும் கரன்ட் சப்ளை இருக்குடா, நீ தப்பிக்கவே முடியாது" என்று சொல்வது ஒரு சோறு பதம்.

கடைசியாக ப்ரியாவையும் மற்ற எல்லா மாணவர்களையும் காப்பாற்றுகிறார். விருதகிரி ந்யூஸில் வருகிறார். எல்லோரும் இவருக்கு சல்யூட் அடிக்கிறார்கள். படம் முடிந்துவிட்டது. அவ்வளவுதான். விஜயகாந்தை பார்த்த பிறகு நம் கண்கள் அவரை மாதிரியே சிகப்பாக மாறிவிடுகிறது சைடு எஃபெக்ட் !

சேனல்காரங்க எடுக்குற படத்துக்கு மட்டும் எங்கேயும் திருட்டு விசிடி கிடைக்க மாட்டேங்குதே அதன் மர்மம் என்ன என்று படத்த்தில் ஒரு வசனம் வருகிறது. எவ்வளவு உண்மை :-)

0 comments:

Post a Comment