இந்தியா, சீனாவுக்கு இடை யேயான இரண்டாயிரம் ஆண்டுக் கால உறவு தற்போது புதிய கோணத்தில் பரிணாமம் அடைந்து வருகிறது. அதை விளக்குவது தான் இக் கட்டுரை. இந்தியாவின் மென்பொருளையும், சீனாவின் வன்பொருளையும் (ஹார்ட்வேர்) இணைத்து நாம் உலக அரங்கில் செயல்பட்டால், நம்மை வேறு யாராலும் வெல்ல முடியாது'கடந்த 2005ல், இந்தியாவுக்கு வந்த சீனப் பிரதமர் ஷாவோ ஜியாங் சொன்ன வார்த்தைகள் இவை. பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் தலைமையகத்தில் அவர் உரை நிகழ்த்தினார் என்றாலும், இந்திய மென்பொருள், சீன வன்பொருள் என்றெல்லாம் அவர் குறிப்பிட்டது தகவல் தொழில்நுட்பத்திற்கு மட்டுமல்ல, இரு நாடுகள் சார்ந்த உலக அரசியலுக்கும் பொருந்தும்.ஐந்தாண்டுகள் கழிந்த பின், இந்த மாதம் இந்தியாவுக்கு வந்த சீனப் பிரதமர் வென் ஜியாபோ இதையே வேறுவிதமாக கூறியிருக்கிறார். இரு பிரதமர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையாகட்டும், நமது வெளியுறவு செயலர் நிருபமா ராவின் பத்திரிகையாளர் சந்திப்பாகட்டும், இருநாட்டு உறவுகளை பிரச்னை அடிப்படையில் பார்க்காமல், புரிந்துணர்தல் மூலம் பார்க்க வேண்டும் என்பதை தான் தெளிவுபடுத்தியது.
மாறி வரும் மனநிலை : "ஊடகங்களின் நிலைப்பாட்டில் இருந்து இருநாட்டு உறவு குறித்து கொள்கைகளை வகுக்கும் எங்களது எண்ணவோட்டம் மாறி இருக்கிறது' என்று நிருபமா ராவ் குறிப்பிட்டார்.அதாவது, அரசின் மாறி வரும் மனப் போக்கை அறியாமலே, ஊடகங்கள் ஏனோ தானோ என்று இந்திய - சீன உறவு குறித்து, பழைய பல்லவியையே பாடி வருகிறது என்று அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
காரணம் என்ன? நமது அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், ஏன் இலங்கை ஆகிய நாடுகளுடனான, கடந்த கால கசப்பான அனுபவங்கள் இன்னும் நமது நாட்டின் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. அந்த நிகழ்வுகள் நடந்த காலத்தில் மத்திய அரசில் உயர் பதவிகளில் இருந்து கொள்கை வகுத்த பலரும் இன்று ஊடகங்களுக்கு "விஷய தானம்' செய்து வருகின்றனர்.அவர்களால் தங்கள் கால அனுபவங்களையும், நிகழ்வுகளையும் மறக்க முடிவதில்லை. அதில் இருந்து மாறுபட்டு சிந்திக்கவும் முடியவில்லை.இந்திய - சீன உறவின் தற்கால, தாற்காலிமான முட்டுக்கட்டை என்பது, 1962ல் நடந்த "சீன ஆக்கிரமிப்பு' காலகட்டத்தில் துவங்கியது.ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் "இந்தி - சீனி பாய் பாய்' என்று சகோதர உறவு கொண்டாடப்பட்டது. அன்று சீனப் பிரதமராக இருந்த சூ என் லாய் உடன் அவர் கையெழுத்திட்ட 'பஞ்சசீலப் பிரகடனம்' 1950ல் நமது நாட்டு ஆரம்பப் பள்ளிகளிலும் பாடமாகவே இருந்தது.ஆனால், 1962ல் நடந்த "சீன ஆக்கிரமிப்பு' நமது நாட்டின் முதுகில் குத்திய செயலாகவே அமைந்தது. இப்போதும் அதுபோன்ற ஒரு சூழ்நிலைக்குள் சீனா, இந்தியாவை தள்ளுகிறதோ என்ற அறிவுஜீவிகள் சிலர் கருத்தையும், நாம் மறுக்க முடியாது.அதாவது, இந்திய - சீன உறவுகள் இன்னும் பல ஆண்டுகள் கவனத்துடன் கூடிய நல்லெண்ணம் என்ற பாதையிலேயே பயணித்து கொண்டிருக்கும். அதற்கு வேறு காரணங்களும் உள்ளன.எப்படி, இந்தியா சீனாவை தொடர்ந்து சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறதோ, அப்படியே சீனாவும் இந்திய - அமெரிக்க உறவுகளை காண்கிறது. இந்திய - அமெரிக்க உறவு வலுப்பெறுவதற்கு, தனது கடந்த கால செயல்பாடுகளே காரணிகள் என்பதையும் சீனா உணர்ந்துள்ளதாக எண்ண தோன்றுகிறது.அந்தக் காரணிகளை சீனா புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே, இருதரப்பு உறவுகள் உண்மையிலேயே மேம்படும்.
ஆறு காரணங்கள்: கடந்த பல ஆண்டுகளாக சீனாவுடனான உறவை வைத்து நோக்கும் போது, மேலும் ஒரு போருக்கான சாத்தியங்கள் இல்லை என்றே சொல்லலாம். முன்பு, 1962ல் நிகழ்ந்த போருக்கு எல்லைப் பிரச்னை காரணமாக இருந்தது. அப்போது, சீனாவிற்கு அந்நாளைய சோவியத் யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் எல்லைப் பிரச்னைகள் இருந்தன.அவற்றில் பலவற்றையும் சீனா, பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்தியாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தைகளை சீனா பின்னுக்கு தள்ளி வந்துள்ளது. பல ஆண்டுகளாக துவங்கப்படாமலே இருந்த பேச்சுவார்த்தைகளை, சீனா தற்போது ஆமை வேகத்தில் தான் நகர்த்தி வருகிறது.தற்போதைய சூழலில் இந்திய - சீன உறவுகள் மேம்பட்டு சீரடைய சில காரணங்கள் தடையாக உள்ளன. அவை சரியாக கையாளப்படவில்லை என்றால், அவையே எதிர்காலத்தில் இருநாடுகளுக்கிடையில் மீண்டும் ஒரு போர் துவங்குவதற்கான கட்டாயத்தை அல்லது வாய்ப்பை உருவாக்கிவிடக் கூடும்.
அந்த காரணங்களை, ஆறு விதமாக பிரிக்கலாம். அவை:
1. மாறி வரும் சர்வதேச சூழலில், சீனா தனது ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
2. சீனா - பாகிஸ்தான் இடையேயான உறவுகள்.
3. உலகளவில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையேயான "பனிப் போரின்' முடிவும், அதனால் மேம்பட்டு வரும் இந்திய - அமெரிக்க உறவு முறையும்.
4. இந்திய - சீன எல்லைப் பிரச்னை மற்றும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை.
5. பவுத்த தலைவர் தலாய்லாமா காலத்திற்கு பின்னால், திபெத்தில் ஏற்பட கூடிய பிரச்னைகளும், அவற்றில் இந்தியாவின் பங்களிப்பும்.
6. இந்தியாவை சுற்றி சீனா ஏற்படுத்தி வருவதாக, மேல்நாட்டு பாதுகாப்பு அறிஞர்கள் கூறி வரும் "முத்துமாலை' வியூகம்.
1. மாறி வரும் சர்வதேச சூழலில், சீனா தனது ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
2. சீனா - பாகிஸ்தான் இடையேயான உறவுகள்.
3. உலகளவில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையேயான "பனிப் போரின்' முடிவும், அதனால் மேம்பட்டு வரும் இந்திய - அமெரிக்க உறவு முறையும்.
4. இந்திய - சீன எல்லைப் பிரச்னை மற்றும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை.
5. பவுத்த தலைவர் தலாய்லாமா காலத்திற்கு பின்னால், திபெத்தில் ஏற்பட கூடிய பிரச்னைகளும், அவற்றில் இந்தியாவின் பங்களிப்பும்.
6. இந்தியாவை சுற்றி சீனா ஏற்படுத்தி வருவதாக, மேல்நாட்டு பாதுகாப்பு அறிஞர்கள் கூறி வரும் "முத்துமாலை' வியூகம்.
என்றாலும், சீன மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்னைகளை மையமாக வைத்தே இருநாடுகளிடையேயான உறவுகள் முறிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அந்த சமயத்தில், சீனா, எல்லைப் பிரச்னையை காரணம் காட்டி, இந்தியாவுடன் ஒரு "குறுகிய கால' போரை அரங்கேற்ற நினைக்கலாம். அப்போது, பாகிஸ்தான், இலங்கையில் அம்பந்தோட்டை மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் மியான்மர் எனப்படும் பர்மா ஆகிய நாடுகளில் தனக்குள்ள தற்போதைய உரிமையைப் பயன்படுத்தி, இந்திய ராணுவத்தை ஆங்காங்கே முடக்க முயலலாம். இதுவே, சீனாவில் 'முத்துமாலை' வியூகத்தின் சாராம்சம்.இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, நமது மத்திய அரசு இலங்கை, நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை சீரமைத்து வருகிறது.என்றாலும், சீனா அளவுக்கு நம்மால், நமது அண்டை நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை வாரி வழங்கி விட முடியவில்லை.ஜனநாயக நாடான இந்தியாவில் சாலை இல்லாத ஊர்கள், மின்வசதி இல்லாத கிராமங்கள், கல்வி மற்றும் மருத்துவ வசதி கிடைக்காத மக்கள் இருக்கும் வரையிலும் இது சாத்தியமில்லை தான்.ஆனால் "கம்யூனிஸ்ட்' சீனா, தனது உள்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்து விட்டு அந்நாட்டு அரசு, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளின் வளர்ச்சி பணிகளுக்காக வாரி இறைக்கலாம், கேட்பாரில்லை.எனவே தான், இந்திய அரசு, பொருளாதார உதவிகளுக்கும் அப்பாற்பட்டு அரசியல் ரீதியான உறவுகளை மேம்படுத்தி வருகிறது.
எல்லை பிரச்னை:இந்திய - சீன உறவில் முக்கியப் பிரச்னை எல்லை தொடர்பானது தான். இதில் "மக்மோகன் எல்லைக் கோடு' எனப்படும் பகுதி குறித்து, 1800ம் காலகட்டத்திலேயே ஒரு முடிவு எட்டப்பட்டு விட்டது. அது அன்று, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், தங்களை மிரட்டி ஒப்புக் கொள்ள வைத்ததாக சீனா இன்றளவும் கூறி வருகிறது.
எது எப்படியோ, சீனா அந்த வரைவு ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்து இடவில்லை என்பதே உண்மை.இப்பிரச்னை, இந்தியா, சீனா மற்றும் திபெத் சம்பந்தப்பட்டது. ஆனால், மொத்தம் இரு நாடுகள் இடையேயான 3,800 கி.மீ., நீளமுள்ள எல்லைப் பகுதிகளில், 1,800 கி.மீ., பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியோடு சம்பந்தப்பட்டது.கடந்த 1971ல் நடந்த வங்கதேசப் போர் மற்றும் 1999ல் நடந்த கார்கில் போர் ஆகியவற்றில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடுநிலை வகித்த சீனா, தற்போது காஷ்மீர் பிரச்னைக்கு புதியதொரு கோணத்தை கொடுத்துள்ளது.கார்கில் போர் உச்சத்தில் அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் முஸ்தீபுகளுக்கும், முகஸ்துதிகளுக்கும் முகம் கொடுக்காத சீனாவின் தற்போதைய இந்த நிலைப்பாடு கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் தான்.
எது எப்படியோ, சீனா அந்த வரைவு ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்து இடவில்லை என்பதே உண்மை.இப்பிரச்னை, இந்தியா, சீனா மற்றும் திபெத் சம்பந்தப்பட்டது. ஆனால், மொத்தம் இரு நாடுகள் இடையேயான 3,800 கி.மீ., நீளமுள்ள எல்லைப் பகுதிகளில், 1,800 கி.மீ., பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியோடு சம்பந்தப்பட்டது.கடந்த 1971ல் நடந்த வங்கதேசப் போர் மற்றும் 1999ல் நடந்த கார்கில் போர் ஆகியவற்றில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடுநிலை வகித்த சீனா, தற்போது காஷ்மீர் பிரச்னைக்கு புதியதொரு கோணத்தை கொடுத்துள்ளது.கார்கில் போர் உச்சத்தில் அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் முஸ்தீபுகளுக்கும், முகஸ்துதிகளுக்கும் முகம் கொடுக்காத சீனாவின் தற்போதைய இந்த நிலைப்பாடு கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் தான்.
காஷ்மீரில் சீனா : வாஜ்பாய் ஆட்சிக் காலம் துவங்கி, பரஸ்பர உறவுகளை சீர்படுத்தும் விதமாக, உயர் மட்ட அளவில் எல்லைப் பிரச்னை குறித்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளைத் துவக்கின.இருநாட்டுத் தலைமையில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், சரியான பாதையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இதில் இந்தியாவின் மேற்குப் பகுதியான லடாக் மற்றும் கிழக்கே அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை குறித்த சர்ச்சைகள் பற்றியே பேச்சுவார்த்தைகள் அமைந்தன.அதிலும், குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவான, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ச.கி.மீ.,பகுதியுமே, திபெத்தின் தென் பகுதி என்று சீனா கூறி வந்துள்ளது.என்றாலும், இக்காலகட்டத்தில் தான், 1975ல் இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை சீனா ஏற்றுக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக, சீன அரசு வெளியிடும் இந்தியாவின் வரைபடங்களில், சிக்கிம் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாகவும் காட்டப்பட்டது.எல்லைப் பிரச்னைகளுக்கு அப்பால், எல்லையை ஒட்டிய இருதரப்பு வர்த்தகமும், பல பத்தாண்டுகளுக்குப் பின் தான் துவங்கப்பட்டது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 1950களில் துவங்கிய "திபெத், சீனாவின் ஒரு பகுதி' என்ற மந்திரத்தை இந்தியாவும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சொல்லி வந்திருக்கிறது.
அதுபோன்றே, தைவானையும் தன்னுடன் இணைக்க விரும்பும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் "ஒரே சீனா' என்ற நிலைப்பாட்டையும், இந்தியா தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது.என்றாலும், தற்போது காஷ்மீர் பிரச்னையில் சீனா சுற்றி வளைத்து மூக்கை நுழைத்துள்ளது. இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையில், ஆயிரத்து 800 கி.மீ., பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டியிருக்கிறது.இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னையை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொண்ட பின், சீனா அந்தப் பகுதி குறித்த எல்லைப் பேச்சுவார்த்தையைத் துவக்கும்.அதாவது, பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்னையில் இந்தியா ஒரு சுமுகமான முடிவை எட்டினால் மட்டுமே, சீனாவுடனான எல்லைப் பிரச்னையைத் தீர்த்துக் கொண்டு, சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.ஏற்கனவே, தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான், சீனாவுக்குத் தாரைவார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அப்பகுதியில் தான் சீனா "காரகோரம்' நெடுஞ்சாலையை அமைத்து இந்தியாவிற்கு எதிரான தனது ராணுவ முஸ்தீபுகளுக்கு ஒரு புதுவழியும் ஏற்படுத்திக் கொண்டது.பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை சீரமைப்பதற்கு தனது படைகளை சீனா இந்த வழித்தடம் மூலம் தான் அனுப்பி வைத்தது.ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கப் படைகள், மறுபுறத்தில் சீனப் படைகள் என்ற அசாதாரண நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டாலும், அது இந்தியாவைப் பாதிக்கவில்லை என்பதே உண்மை.இதே காலகட்டத்தில், சீனாவிற்குச் செல்லும், காஷ்மீர் மக்களை இந்தியக் குடிமக்களாகக் கருதாமல் அவர்களது இந்திய பாஸ்போர்ட்டுகளில் தனியாக ஒரு பேப்பர் விசாவை சீனா வழங்கத் துவங்கியது.கடந்த காலங்களில் எப்போதும் இருந்திராத சீனாவின் இந்த நடவடிக்கை, இருநாட்டு உறவுகளிலும் ஒரு தெளிவின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் ஒருபடி மேற்சென்று, காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை சீனா எடுத்துள்ளது.
இந்தியாவின் பதிலடி : இருதரப்புப் பிரச்னைகளில், பாகிஸ்தானை விட சீனாவிற்கு நாம் அதிக இடம் கொடுத்து விட்டோம் என்ற எண்ணம், நமது நாட்டிலேயே பாதுகாப்புத் துறை நோக்கர்களிடையே பரவலாக உள்ளது இதில் உண்மை இல்லாமல் இல்லை.கடந்த 1962ல் சீனாவின் ஆக்கிரமிப்பு என்பது மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டுள்ள சீனாவின் ராணுவ வலிமையை, நாம் குறைத்து மதிப்பிட முடியாது.அதுபோன்றே, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா அடைந்துள்ள பொருளாதார வலிமையையும், அதனால் உலகரங்கில் அந்த நாடு பெற்றுள்ள அதிகப்படியான அரசியல் ஆளுமையையும் கூட, நமது அரசு உணர்ந்துள்ளது.அடுத்த நாடுகளுக்காக வாரி இறைக்கும் சீனப் பொருளாதார வலிமை மற்றும் ஐ.நா., சார்ந்த, சாராத அரசியல் ஆளுமை ஆகியவற்றின் காரணமாகவே, இந்தியாவின் அண்டை நாடுகள் பலவும், சீனாவுக்கு ஆதரவு அளிப்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.இதை கண்டு இந்தியாவும் சும்மா இருந்துவிடவில்லை.
பொருளாதார ரீதியாக நாமும், கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இந்த வலிமையாலும் நாம் தற்போது ஏற்றுக் கொள்ளும் அரசியல் காரணங்களுக்காகவும், நமது அண்டை நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.தமிழர் பிரச்னைக்கு அப்பாற்பட்ட இந்திய - இலங்கை உறவுகளை இந்த விதத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல. சீனாவுக்கு காஷ்மீர் பிரச்னையும், பேப்பர் விசா பிரச்னையும் கை கொடுக்கிறது என்றால், நமது நாடு தைவான் பிரச்னையை தன் கையில் வைத்துள்ளது.சமீபத்தில், சீனப் பிரதமர் வென்ஜியாபோவும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "ஒரே சீனா' என்ற மந்திரத்தை உச்சரிக்க இந்தியா மறுத்து விட்டது.அதுபோன்றே திபெத் தலைவர் தலாய்லாமா, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் என்ற இடத்தில் உள்ள பவுத்த மத விகாரைக்கு சென்ற போது, சீனாவின் எதிர்ப்பை இந்தியா கண்டு கொள்ளவில்லை. பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் போது, டில்லியில் திபெத்தியர்கள் அதை எதிர்த்து நடத்திய போராட்டங்களுக்கும் இந்தியா அனுமதி அளித்தது. அதேவழியில், தற்போது ஜியாபோ வருகையின் போதும் திபெத்தியர்கள், நமது அரசின் அனுமதி பெற்று சீனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டங்கள் வன்முறையாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் நமது அரசு கவனமாக இருந்தது.இந்தாண்டின் நோபல் சமாதான விருது, சீனாவில் சிறையில் வாடும் லியு ஷியாபோவுக்கு வழங்கப்பட்டது. அந்த விருது நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. அதற்கு சீனாவின் காஷ்மீர் நிலைப்பாடும் ஒரு காரணம்.உலகம், தன்னை வல்லரசாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பும் சீனா, தனது விருப்பங்களுக்கு வலிமைமிக்க நாடாக மாறிவரும் இந்தியாவின் எதிர்ப்பை, உலகரங்கில் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அடுத்து என்ன?அண்மை காலத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா, பொருளாதாரம், அரசியல், ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் தொடர்பாக பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது, இந்திய ஊடகங்கள் அளித்த வரவேற்பு அதிகளவில் இருந்தது. அதேநேரம், பின்னர் நடந்த சீனப் பிரதமர் ஜியாபோவின் வருகையின் போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும், அலுவகங்களிலும் சி.பி.ஐ., நடத்திய அதிரடி சோதனை தான் ஊடகங்களில் அதிகமாக இடம் பெற்றது. இது துரதிர்ஷ்டமே.என்றாலும், இந்தியா, சீனாவுக்கிடையே பிரச்னை என்று வந்து விட்டால், அதை அரசியல் மற்றும் ராஜரீக வழிகள் மூலம் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க வல்லரசு நிச்சயமாக முயலும். இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் பாகிஸ்தான் கைகோர்த்து தன்னுடனான உறவை குறைத்து கொள்ளுமோ என்ற அமெரிக்காவின் பீதி, இதற்கு ஒரு காரணமாக அமையும்.தங்களுக்குள் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த மூன்று நாடுகளுமே அணு ஆயுத நாடுகள். எனவே, எல்லைப் போர் அணு ஆயுதப் போராக மாறிவிடுமோ என்ற கவலை அமெரிக்கா உட்பட உலக நாடுகளுக்கு இல்லாமல் இல்லை.கொள்கை ரீதியாக இந்தியாவை அமெரிக்கா ஆதரிக்கும் என்று நாம் எதிர்பார்த்தாலும், சீனாவுடன் போர் என்று வந்துவிட்டால், அமெரிக்கா நடுநிலைமையே வகிக்கும்.
இதையும் நமது அரசு உணர்ந்தே உள்ளது.இந்தப் பின்னணியில் தான் முந்தைய சோவியத் யூனியன் போன்ற நட்பு நாடு நமக்கு தற்போது இல்லையே என்ற ஆதங்கம் நம்மிடையே தோன்றும்."வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்' என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. நமது நாட்டின் சீனா சார்ந்த அணுகுமுறையும், இந்தப் பழமொழியையொட்டியே அமைந்துள்ளது.அரசியல் - ராஜரீக வழியில் சீனாவை எதிர்கொண்டாலும், வல்லரசு நாடான அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வந்தாலும், சீனாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டியே வந்திருக்கிறோம். சீனாவும் "எந்த அளவிற்கு இந்தியா இறங்கி வருகிறது' என்று கணிப்பதோடு நிறுத்தி கொண்டுள்ளது.அந்த விதத்தில் மேம்பட்டு வரும் இந்திய - சீன வர்த்தக உறவுகள், புதிய நூற்றாண்டில், இரு நாடுகளிடையேயான அரசியல் மற்றும் ராஜரீக உறவை மேம்படுத்த உதவும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
கடந்த 1999ல் 16 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்த இருநாட்டு வர்த்தகம், தற்போது 60 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இந்தியாவின் பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இருதரப்பு வர்த்தகமும் எதிர்வரும் 2015ல் 100 பில்லியன் டாலர் அளவை எட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், வென் ஜியாபோவும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.இந்த வர்த்தக உறவு தற்போது சீனாவுக்கு சாதகமாக இருக்கிறது என்பதே உண்மை. இது தவிர இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகள், விவசாய விளைபொருட்கள் விஷயத்தில் சீனா பாரபட்சமாகவே நடக்கிறது.
என்றாலும், மாறி வரும் உலகப் பொருளாதார சூழலில் அமெரிக்கா உட்பட்ட மேற்கத்திய நாடுகளை விட, இந்தியாவே தனது சிறந்த வர்த்தக கூட்டாளியாகவும் தனது பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான முக்கிய தளமாகவும் அமையும் என்பதையும் சீனா உணர்ந்துள்ளது. அதற்கு இந்தியாவுடனான வர்த்தக உறவை பரஸ்பரம் நன்மை பயக்கும் விதத்தில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் அந்த நாடு மேலும் விரும்புகிறது."வரப்புயர நீர் உயரும்' என்பது போல, இருதரப்பு வர்த்தக பொருளாதார உறவுகள் மேம்படும் போது, இந்திய- சீன அரசியல் உறவுகளும் சீரடையும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அப்போது, பாகிஸ்தானைப் பிடித்துள்ள பயங்கரவாதம் என்ற நோய் தன்னையும் பாதிக்கிறது என்று சீனா ஏற்றுக் கொள்ளும்.அவ்வாறு நிகழுமானால் அதுவே இந்திய - சீன உறவுகளில் நமக்குக் கிடைக்கும் முதல் வெற்றியாக இருக்கும்.
(கட்டுரையாளர், டில்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் "அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்' அமைப்பின் சென்னைப் பிரிவு இயக்குனர். இவர் பத்திரிகையாளர் மற்றும் அரசியல் நோக்கர் ஆவார். விமர்சனங்களை sathiyam54@hotmail.co என்ற முகவரிக்கு அனுப்பலாம்.)
0 comments:
Post a Comment