ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைப்பு - நடிகர் விஜய்


எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. மீறி என் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தைக் கலைத்துவிடுவேன், என்று விஜய் அறிவித்துள்ளார். இனி ரசிகர் மன்ற விவகாரங்களில் தன் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் ஈடுபடமாட்டார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் தன் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதற்கென தனி கொடியையும் நயன்தாராவை வைத்து வெளியிட்டார். தொடர்ந்து ஆங்காங்கே நிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இலவசத் திருமண நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். 

திடீரென ஒரு நாள் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்துவிட்டு வந்து பிரஸ் மீட் வைத்து அறிவித்தார். ராகுல் காந்தியே தன்னை அழைத்ததாகக் கூறினார். ஆனால் ராகுல் காந்தியோ தான் யாரையும் அழைக்கவில்லை என்றும், அப்பாயின்ட்மென்ட் கேட்டு வந்ததால் விஜய்யைச் சந்தித்தேன் என்றும் கூறினார். 

தொடர்ந்து காவலன் படம் வெளியீட்டுக்கு அப்போதைய ஆளும்கட்சி திமுக முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறி பேட்டிகள் கொடுத்த விஜய், திடீரென ஒரு திருமணத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவைச் சந்தித்து வணக்கம் வைத்தார். தொடர்ந்து தேர்தலின்போது அதிமுகவை ஆதரிப்பதாகக் கூறினார். 

போயஸ் தோட்டத்துக்குப் போய் ஜெயலலிதாவை தன் தந்தையுடன் சந்தித்தார். அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே.எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நண்பன், துப்பாக்கி என இரு படங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகி, வசூலையும் கொடுத்தன. இந்த நேரத்தில் விஜய் பெரிய அளவில் அரசியலில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சுகள் கிளம்பின. 

அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் போகும் இடமெல்லாம் அப்படித்தான் பேசி வந்தார். ரசிகர் மன்ற விளம்பரங்களில் ஒரு பக்கம் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு புரட்சித் தலைவி அம்மா என்று குறிப்பிட்டிருந்த நிர்வாகிகள், அதற்கு எதிர்ப்பக்கம் எஸ் ஏ சந்திரசேகரன் படத்தைப் போட்டு புரட்சி இயக்குநர் அப்பா என குறிப்பிட்டிருந்தார்கள். இது அதிமுகவினரை மட்டுமல்ல, பார்த்த அனைவரையுமே முகம் சுழிக்க வைத்தது. நான் அண்ணாவைப் போன்றவன்.. 


என் மகன் எம்ஜிஆரைப் போன்ற ஆற்றல் மிக்கவன் என்று ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார் எஸ்ஏ சந்திரசேகரன். இந்த நேரத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தலைவா என்று தலைப்பிட்டு, அதற்குக் கீழே தலைமை ஏற்கும் நேரம் இது என ஆங்கில வாசகம் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் பாத்திரங்களில், விஜய்யின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு பெயர் அண்ணா. அண்ணாவுக்குப் பிறகு விஜய் தலைமை ஏற்க வருவதுபோல காட்சிகள் வசனங்கள் வைத்திருந்தனர். 

இந்தப் படம் வெளியாக பட்ட பாடுகள் எல்லாம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இந்த நிலையில்தான் நேற்று விஜய் திடீரென்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. தயவுசெய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை போடவேண்டாம். அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மன்றங்களை கலைக்கக்கூட தயங்க மாட்டேன். 

 இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன்.
 என் தந்தையோ, வேறு யாரோ மன்ற விஷயங்களில்  தலையிடமாட்டார்கள்". -இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த அறிக்கை ட்விட்டரில் வெளியாகியிருந்தது.