உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்


“உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகைகள் சொல்வதைத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு நடிகர் இந்த வசனத்தை சொன்னது மட்டுமின்றி, இதனால் படப்பிடிப்பையே நிறுத்தி வைத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
நீங்கள் நம்புங்கள்.
அந்த நடிகர் வேறு யாருமல்ல ‘கோ’ படத்தில் வித்தியாச வில்லனாக வந்து கலக்கிய அஜ்மல்தான். இப்படத்திற்குப் பிறகு `கருப்பம்பட்டி.’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார், பிரபுராஜ சோழன் இயக்கும் இப்படத்தில் அபர்ணா பாஜ்பாய் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட காட்சிகள் பழனியில் படமாக்கப்பட்டன.
காட்சிப்படி, அஜ்மலின் காதலை அபர்ணா ஏற்றுக்கொண்தற்கு பரிசாக அவருக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் தர வேண்டும். அபர்ணாவிடம் இயக்குனர் காட்சியை விவரிக்க, அதன் முக்கியத்துவம் கருதி அபர்ணா நடிக்க சம்மதித்தார்.
அஜ்மலிடம் காட்சியை சொன்னதும், “உதட்டுடன் உதடு சேர்த்து முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்” என்றார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. கதாநாயகிதான் மறுப்பார் என்று எதிர்பார்த்த டைரக்டருக்கு, அஜ்மல் மறுத்தது ஏமாற்றத்தை அளித்தது.
“உங்களிடம் கதை சொல்லும்போது கூட இந்த காட்சியை பற்றி விவரித்து இருந்தேனே” என்று டைரக்டர் வற்புறுத்தி கேட்டும், அஜ்மல் பிடிவாதமாக நடிக்க மறுத்தார்.
இதனால் 2 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளர் சுந்தர் கே கதாநாயகன் அஜ்மல், இயக்குனர் பிரபுராஜ சோழன் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தினார். அதன்பிறகு உதட்டு முத்த காட்சி மாற்றப்பட்டு, கன்னத்தில் முத்தமிடுவது போல் படமாக்கப்பட்டது.
இது குறித்து அஜ்மலிடம் கேட்டதற்கு;
“நான் சினிமா நடிகர் ஆவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை. அவர்கள் விருப்பப்படி ரஷியாவில் டாக்டருக்கு படித்து முடித்து, `டிகிரி’யை அவர்களிடம் கொடுத்துவிட்டு, நடிப்பு துறைக்கு வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் சில நிபந்தனைகளை எனக்கு விதித்தார்கள்.
நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது. விரசமான காட்சிகளில் நடிக்கக்கூடாது. இரட்டை அர்த்த வசனம் பேசக்கூடாது” என்று அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இன்று வரை உறுதியுடன் இருந்து வருகிறேன். நான் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடித்தால், வீட்டில் சேர்க்க மாட்டார்கள்.” என்றார்.