தனது தந்தையின் நினைவாக ராணா என படத்திற்கு ரஜினிகாந்த் பெயர் சூட்டியுள்ள போதிலும், ராசி கருதி இப்படத்தின் பெயரை ஐந்து எழுத்துக்களில் தமிழில் வருமாறு மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளனராம். இருப்பினும் படப் பெயர் மாற்றும் வேலையை கடைசியாக பார்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனராம்.

Raana
ரஜினிகாந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோண் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உருவாகும் படம் ராணா. படத்தின் பூஜை போடப்பட்ட நாளில் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே படம் தடைபட்டது. தற்போது ரஜினி உடல் நலமடைந்து திரும்பியுள்ளதைத் தொடர்ந்து மீண்டும் முழு வீச்சில் படம் தொடங்கவுள்ளது.ரஜினி தயாரானவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராணா என்ற பெயர் ராசிப்படி சரியாக இல்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், அதை மாற்றி விடலாம் என்ற யோசனைக்கு படக் குழு வந்துள்ளதாக தெரிகிறது.

உண்மையில் ராணோஜி ராவ் என்ற ரஜினியின் அப்பா பெயரிலிருந்துதான் இப்படத்திற்கு ராணா என்று ரஜினி பெயர் தேர்வு செய்து வைத்தாராம். எனவே இப்பெயரை மாற்றுவதில் ரஜினிக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.ஆனால் தற்போது ராணா படத்தின் தொடக்கத்திலிருந்து பல்வேறு பிரச்சினைகளாகி விட்டதால் படத்தின் பெயரை மாற்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே பாபா என்ற இரட்டை எழுத்துப் பெயர் கொண்ட படம் சந்தித்த பிரச்சினைகளையும் இத்தோடு இணைத்து ராணாவும், இரண்டெழுத்தில் இருப்பதால் தேவையில்லாத பிரச்சினை எதற்கு என்று கூறியுள்ளனராம்.மேலும் படையப்பா போல ஐந்தெழுத்து அல்லது சந்திரமுகி போல 6 எழுத்தில் நல்ல தமிழ்ப் பெயராக வைத்து விடலாம் என்ற யோசனையும் ரஜினிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ரஜினியும் யோசிப்பதாக தெரிகிறது.இப்போதைக்கு படப்பிடிப்பைத் தொடங்குவது, பெயர் மாற்றத்தைப் பிறகு பார்க்கலாம் என்று ரஜினித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.