திகட்ட திகட்ட காதலிச்சிட்டேன்! சிம்பு பரபரப்பு பேட்டி!!


திகட்ட திகட்ட காதலித்து விட்டதாக நயன்தாராவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு கூறியிருக்கிறார். நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் காதலித்ததும், பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து காதல் முறிவு ஏற்பட்டது நடந்து முடிந்த சங்கதி.

சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த நயன்தாராவுக்கு நட்புடன் ஆறுதல் சொல்லி வந்தார் பிரபுதேவா. பிற்காலத்தில் அந்த ஆறுதலும், அக்கறையும் நயன்தாராவை கவர, பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்தார். பிரபுதேவாவும் தனக்கு ஒரு காதல் மனைவி இருப்பதை மறந்து நயன்தாராவிடம் மனதை பறிகொடுத்தார். இருவரும் திருமணம் செய்யாமலேயே சிறந்த தம்பதி விருது வாங்கும் அளவுக்கு நெருக்கமாக ஊர் சுற்றினார்கள். இதற்கிடையில் முறைப்படி தன் முதல் மனைவி ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்து விட்டார்.

விரைவில் தனது இரண்டாவது காதலியான நயன்தாராவை, இரண்டாவதாக திருமணம் செய்யவிருக்கிறார் பிரபுதேவா. இந்நிலையில் நடிகர் சிம்பு அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் பற்றிய கேள்வியொன்றுக்கு பதில் அளித்திருக்கும் சிம்பு, காதல் தோல்வியால் இதுவரைக்கும் நான் எந்த தனிமையையும் உணரவில்லை. எல்லாமும் நடந்து முடிந்துவிட்டது என இந்த வாழ்வை ஈஸியாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த 25 வருஷத்தில் சில படங்களை முடித்து திரும்பி பார்த்தால், வாழ்க்கை எப்படியெல்லாம் சுழற்றி அடித்திருக்கிறது. நிறைய மாற்றங்கள். எல்லாவற்றையும் ரசிக்கிறேன்.
 திகட்ட திகட்ட காதலிச்சாச்சு. இனி எனக்கான அடையாளமாக அந்தக் காதல் இருக்குமான்னு தெரியவில்லை. எல்லாமே மாறக் கூடியதுதானேன்னு நடை போட ஆரம்பித்துவிட்டேன். என்னை பொறுத்த வரைக்கும் தனிமையை எல்லா மனிதர்களும் உணரணும். அப்போதுதான் நல்லது, கெட்டது செய்த நாள்களை அசைபோட முடியும், என்று கூறியிருக்கிறார்.