கடந்த ஆட்சிகாலத்தில் பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் அரசியல்வாதி கெட்அப்பில் கலந்து கொண்டு அஜீத் பேசிய பேச்சு எப்படியெல்லாம் சர்ச்சையை உருவாக்கியது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அந்த சர்ச்சைகளால் அஜீத் சந்தித்த பிரச்சனைகளும் ஏராளம். நாங்கள் அரசியல்வாதிகள் இல்லை; சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகர்கள்; எங்களை வலுக்கட்டாயமாக இதுபோன்ற விழாக்களுக்கு அழைக்காதீர்கள் என்று அதிரடியாக பேசி, ஒட்டுமொத்த திரையுலகின் கைத்தட்டலைப் பெற்ற அஜீத், தற்போது மங்காத்தா படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் இப்படத்தினை டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளதால் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறிவிட்டுள்ளது. இதனிடையே தினமும் மங்காத்தா பற்றி புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் தகவல், மங்காத்தாவில் அஜீத்தின் அரசியல் பஞ்ச்கள் இடம்பெற்றுள்ளன என்பதுதான். எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்கும் அஜீத், தன் படங்களில்கூட அரசியல் வசனங்களை தவிர்ப்பார். கடந்த ஆட்சிகாலத்தில் அரசியல்வாதிகளால் தான் உள்பட திரைத்துறையை சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டதால், மங்காத்தாவில் அரசியல் வசனங்களை அனுமதித்திருப்பாரோ என்னவோ?