வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “என்னது, வடிவேலு நடிக்கிறாரா?” என்று திருப்பிக் கேட்டார் நடிகர் சிங்கமுத்து.
வடிவேலுவுடன் நடித்து பிரபலமானவர் சிங்கமுத்து. ஆனால் நில மோசடியில் இவருக்கும் வடிவேலுவுக்கும் பகை ஏற்பட்டது. தன்னை பலகோடி ஏமாற்றிவிட்டதாக வடிவேலு கொடுத்த புகாரில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

கடந்த தேர்தலில் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாகவும், சிங்கமுத்து அதிமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தனர்.
தேர்தலில் திமுக தோற்றபிறகு, வடிவேலுவை திரையுலகில் முற்றாக ஓரங்கட்டியுள்ளனர். அவருக்கு கைவசம் புதுப்படம் ஏதுமில்லை. அவரும் அதுபற்றி வெளிப்படையாக அலட்டிக் கொள்ளாமல் உள்ளார்.
இந்த நிலையில் ஈரோட்டுக்கு இன்று வந்திருந்த சிங்கமுத்துவிடம் வடிவேலு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
உடனே, “வடிவேலுவுக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. சினிமாவிலேயே நான் எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசித்தான் அவர் முன்னுக்கு வந்தார்,” என்றார்.
மீண்டும் வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, “என்னது வடிவேலு நடிக்கிறாரா!? போங்க தம்பீ… தமாஷ் பண்ணாதீங்க!” என்றார் கிண்டலாக.