விஜய்யை இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை! – அனுஷ்கா பேட்டிவிஜய் மிகவும் திறமைசாலி, ஆனால் அவரை இன்னும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.வேட்டைக்காரன், சிங்கம் ஆகிய படங்களை தொடர்ந்து வெளிவர இருக்கும் தெய்வத் திருமகள் படத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கிறார் அனுஷ்கா.
அருந்ததியாக நடிப்பில் மிரட்டிய அவர், இந்தப் படத்தில் வழக்கறிஞராக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். மதராசாப்பட்டினம் படத்தை இயக்கிய விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் தனது பாத்திரம், விக்ரமோடு இணைந்து நடித்த அனுபவம் உள்ளிட்டவை பற்றி அனுஷ்கா உற்சாகமாக தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
தெய்வத் திருமகள் படம் பற்றி…
மிகவும் வித்தியாசமான படம் இது. 5 வயது சிறுவனின் மனநிலை கொண்ட இளைஞனுக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட கதை. ஆனால் எல்லா பாத்திரங்களுக்குமே சமமான முக்கியத்துவம் உள்ள வகையில் கதை அமைந்திருக்கிறது. இதுவரை நான் நடித்த பாத்திரங்களிலேயே மிகவும் அற்புதமானது என்று சொல்லும் வகையில் எனது பாத்திரம் அமைந்துள்ளது.
உங்கள் பாத்திரத்தில் அப்படி என்ன விசேஷம்?
இதில் வழக்கறிஞராக வருகிறேன். வழக்கமான நாயகி போல இல்லாமல் படம் முழுவதும் வருவதுபோல எனது பாத்திரம் அமைந்திருக்கிறது. கதையை நகர்த்திச் செல்லும் முக்கியமான பாத்திரம். ஒரு நடிகையாக நடிப்பை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு உள்ள பாத்திரம்.
சிங்கம் படத்தின் பாத்திரத்திலிருந்து இது எப்படி மாறுபட்டது?
சிங்கம் முழுக்க முழுக்க கமர்ஷியலான படம். பாடல் காட்சிகளில் கவர்ச்சி இருக்கும். ஆனால் இந்தப் படம் மிகவும் சிறப்பானது. இதன் திரைக்கதை அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விஜய் கதை கூறியதுமே இதில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டேன். விக்ரம் அற்புதமாக நடித்திருக்கிறார். அமலாபாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். கேமிராமேன் நீரவ் ஷாவும் உழைத்திருக்கிறார். அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
விக்ரமோடு நடித்த அனுபவம்…
விக்ரம் அற்புதமான நடிகர். நடிப்பில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு அசாத்தியமானது. அவரைப் பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
இதுவரை நீங்கள் நடித்த நாயகர்கள் பற்றி…
வேட்டைக்காரனில் விஜய்யோடு நடித்தேன். விஜய் மிகவும் திறமைசாலி. ஆனால் அவரது திறமை இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. சூர்யா மிகச் சிறந்த நடிகர். படப்பிடிப்பில் 100 சதவீத ஈடுபாட்டோடு நடிப்பார். சிறந்த நடிகராக இருப்பதோடு, மனைவிக்கு சிறந்த கணவனாகவும், மகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்கிறார். விக்ரமை பொறுத்தவரை அவரது நடிப்பு அசாத்தியமானது. ஆனால் அதையும் மீறி அவர் பணிவோடு இருக்கிறார்.