முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றதற்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்த விரும்புவதாக தெரிவிக்கப்பட்ட கோரிக்கையை,முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.


அப்போது,”நடிகர்களுக்கு பையனூர் அருகே முந்தைய அரசு, 99ம் ஆண்டு குத்தகைக்கு நிலம் ஒதுக்கியது.அந்த இடம் தூரமாக இருப்பதாலும், சொந்தமாக வாங்க முடியாததாலும்,பலரும் அதை வாங்க முன்வரவில்லை. எனவே, அருகிலேயே குறைந்த இடமாக இருந்தாலும்,சொந்தமாக வாங்கும் வகையில் இடம் ஒதுக்க வேண்டும் எனக் கோரினர். இதை பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: இலங்கை அரசுக்கு, பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை, பெரிதுபடுத்தும் வகையில்,சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கியோ அல்லது டில்லியிலோ நடிகர்கள் சார்பில் பேரணி நடத்த விரும்புவதாக தெரிவித்தோம். சிறப்பாக நடத்துமாறு முதல்வர் கூறினார்.
மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றதற்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்த விரும்புவதாக தெரிவித்தோம். அதற்கு முதல்வர், பட்ஜெட் தயாரிப்பு பணியில் தீவிரமாக இருப்பதாகவும், தினமும் ஆய்வுக் கூட்டங்களை நடத்த இருப்பதாகவும் கூறி, இப்போதைக்கு எந்த விழாவும் வேண்டாமென, தெரிவித்துவிட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.