சினிமா என்பது கொத்து கொத்தாய் பணம் காய்க்கும் மரம் என்பதை நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஒரு படம் ஹிட் ஆனால் ஒரு சில நடிகர் & நடிகைகளுக்கு தலைக்கணம் கூடும்.
ஒரு சிலருக்கு சம்பளம் கூடும். இதில் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்தான் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானபோது, சக நடிகர்களே கிண்டல் பண்ணி சிரிக்கும் அளவுக்குத்தான் இருந்தது தனுஷின் பெர்சனாலிட்டி. அதன் பிறகு காதல் கொண்டேன் படம் தனுஷின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசத் தொடங்கியது. சுள்ளான், திருடா திருடி என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தன்னை நன்றாகவே நிலைநிறுத்திக் கொண்டார்.
வெற்றிப்பட நாயகனாக வலம் வந்தாலும், சக நடிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என எல்லோரிடமும் வழக்கம்போலவே சகஜமாக பேசிப் பழகி வந்த தனுஷ், சம்பளத்தை மட்டும் கூட்டிக் கொண்டே போகிறார். தற்போது வேங்கை படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், அடுத்த படத்தில் இருந்து தனது சம்பளத்தை ரூ.7 கோடியாக உயர்த்த திட்டமிட்டிருக்கிறாராம்.