கருப்பு எம்.ஜி.ஆர், புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று தனது ரசிகர்களாலும், தேமுதிக தொண்டர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் சினிமாவில் நடிக்க வருகிறார். ஹீரோவாக அவர் அவதாரம் எடுக்கிறார்.

விஜயகாந்த், பிரேமலதா தம்பதிக்கு 2 மகன்கள். மூத்தவர் பிரபாகரன், இளையர் சண்முகப் பாண்டியன். இதில் மூத்த மகன் எஸ்ஆர்எம் கல்லூரியில், பிஇ படித்து வருகிறார். இளைய மகன் சண்முகப் பாண்டியன், பிளஸ்டூ முடித்துள்ளார். அடுத்து பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கப் போகிறார்.

இந்த நிலையில் தந்தை வழியில் தானும் நடிகராக வேண்டும் என்றஆசையை பெற்றோரிடம் கூறினாராம் சண்முகப் பாண்டியன். இதை விஜயகாந்த்தும், பிரேமலதாவும் வரவேற்று, ஆதரித்துள்ளனர். 

இதையடுத்து மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர் விஜயகாந்த்தும், பிரேமலதாவும். மகனை சிறப்பாக அறிமுகப்படுத்தும் வகையிலான கதையைத் தேர்வு செய்யும் வேலையில் பிரேமலதா மும்முரமாக இறங்கியுள்ளாராம். அக்காவுக்கு உதவியாக தம்பி சுதீஷும் கதை கேட்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹீரோவாவதற்கு முன்பு அடிப்படைத் தேவைகளான டான்ஸ், பைட் ஆகியவற்றையும் சண்முகப் பாண்டியன் கற்க ஆரம்பித்திருக்கிறாராம்.

விரைவில் சண்முகப் பாண்டியன் ஹீரோ அவதாரம் எடுப்பார் என்று விஜயகாந்த் வட்டாரம் தெரிவிக்கிறது.