இன்றைய தினம் மீடியா கனிமொழி மீது தான். அவருடன் யார் வந்திருக்கிறார்கள், என்ன டிரஸ் என்று எல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். துக்ளக் பத்திரிக்கையிலிருந்து சில பகுதிகள்


நமக்கு ஸி.பி.ஐ.யின் நோக்கங்கள் பற்றிய சந்தேகம் தொடர்கிறது. சாதாரணமாக பணம் பாதாளம் வரை பாயும் என்றால், ஊழல் பணம் மலை உச்சி நோக்கி செல்லும்; பெரியவர்களுக்கு பங்கு இல்லாமல், பெரிய ஊழல்கள் நடைபெறாது என்பது, இந்தியப் பொருளாதாரத் தத்துவம். ஆகையால், ஸ்பெக்ட்ரம் ஊழல் பங்கு, மேலே எவ்வளவு தூரம் வரை போகிறது என்பதைப் பொறுத்துத்தான், ஸி.பி.ஐ. விசாரணையின் தன்மை அமையும் என்பது நம் கருத்து.

இப்போது கனிமொழி மீது வந்திருக்கிற குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிற காரணங்களில் சில, வினோதமாக இருக்கின்றன. ‘ராசாவை இவர் அடிக்கடி சந்தித்தார்; இவருக்கு கலைஞர் டி.வி.யின் செய்திகளில் முக்கியத்துவம் தரப்பட்டது...’ என்றெல்லாம் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை எதை நிரூபிக்கப் போகின்றன? கனிமொழி 2-ஜி சதியில் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டையா? எப்படி? நமக்குப் புரியவில்லை.

போகப் போக, இவ்வழக்கில் காட்டப்படுகிற ஆதாரங்கள், ஒருவேளை குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கிற வகையில் அமையலாமோ, என்னவோ! இப்போது குற்றப் பத்திரிகையில் கூறப்படுவதுதான் ஆதாரம் என்றால், அது தமாஷாகத்தான் முடியும்.

குற்றப் பத்திரிகையில், கலைஞரின் மனைவியின் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்பது பலரால் விவாதிக்கப்பட்டு வருகிறது. சரி; புரிகிறது. ஆனால் அதே சமயத்தில், ‘கலைஞர் மீது நடவடிக்கை உண்டா, இல்லையா’ என்பது, ஏன் ஒரு கேள்வியாகக் கூட கருதப்படவில்லை என்பது புரியவில்லை. கிரிமினல் சட்டப்படி, ஒருவரால் அவருடைய மனைவிக்கோ, குமாஸ்தாவிற்கோ, வேலைக்காரனுக்கோ கூட... சொத்து கிடைத்திருந்தால், அது, அவருடைய சொத்தாகவே கருதப்படும்.

ஒருவர், பொது வாழ்க்கையில் இருக்கிறபோது, இந்தப் பொறுப்பு இன்னமும் கூடுகிறது. கலைஞர், பொது ஊழியர். கலைஞர் சேனலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று கலைஞர் கூறியது, அப்படியே ஏற்கப்பட்டதா? அல்லது, அவருடைய மனைவி, மகள் போன்றோரின் பெய ரில் இருப்பது, அவரால் கிட்டியது என்பதால், இவ்விவகாரத்தில் அவருக்கு உள்ள பொறுப்பு விசாரிக்கப்படுகிறதா?

ஸி.பி.ஐ., இந்த விவகாரத்தில் பலன் அடைந்தவர்கள் பட்டியலில் அவர் பெயரையும் இணைத்தால், ‘அப்படி தான் பெற்ற பயன் அல்ல அது’ என்று நிரூபிப்பது, ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி கலைஞர் பொறுப்பாகுமே? இந்த ரீதியில் ஸி.பி.ஐ. சிந்திக்கவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? நமக்குப் புரியவில்லை. நமது சந்தேகங்கள் தொடர்கின்றன; இந்த வழக்கில், சட்டத்தை விட, அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக நமக்குத் தோன்றுகிறது.


கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜர் ஆகிறார். இவர் தான் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.