வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Tuesday, May 17, 2011

சீழ்பிடித்த தலையர்-"சீத்தலைச் சாத்தனார்"


"பிழையான தமிழைப் பார்க்கும் போதெல்லாம், எழுத்தாணியால் தன் தலையில் குத்திக் கொள்வாராம்... சாத்தனார் என்ற புலவர். அதனாலேயே, சீழ்பிடித்த தலையோடு இருந்த அவருக்கு, சீத்தலைச் சாத்தனார் என்பது காரணப் பெயராக ஆகியது!' என குப்பண்ணா சொல்லிவிட்டு, "விபரம் என்று படிக்காத மளிகைக்கடை கணக்கர் தான் எழுதுகிறார் என்றால், அதே மாதிரி பத்திரிகைகளிலும் விபரம் என்றே எழுதுவதைப் பார்க்கும் போது, எனக்கும் சீத்தலை சாத்தனார் போல மண்டையில் குத்திக் கொள்ளலாம் போல இருக்கிறது...' என்றவர் அந்தச் சொல்லின் வேரை விவரித்தார்...
"விவரிப்பார் என்பது வினைச் சொல், அந்த வினைச் சொல்லுக்குப் பெயர்ச்சொல் - விவரம். விபரம் என்பது பெயர் சொல்லாய் இருந்தால், அதற்கு வினைச் சொல் விபரித்தார் என்று இருக்க வேண்டும். அப்படி நம்மில் யாராவது சொல்கிறோமா?' எனக் கேட்டார்...
நமக்கு இந்த விபரங்களில் அவ்வளவு பரிட்சயம் இல்லாததால், திருதிருவென விழித்துக் கொண்டிருந்த போது, குறுக்கே புகுந்தார் லென்ஸ் மாமா...
"தாய் மொழியிலேயே இவ்வளவு தெரியாத சமாச்சாரங்கள் இருக்கின்றன. இதுவே, பிறமொழி என்றாகி விட் டால்...' எனப் புதிர் போட்டு நிறுத்தினார்...
குப்பண்ணா நம்ப கும்பலில் சேர்ந்ததில் இருந்து, "லைட்டர் சப்ஜெக்ட்ஸ்' பேசுவது குறைந்து விட்டது. அவர், தம் புலமையை எடுத்து விட, அவருக்கு தான் குறைந்தவனல்ல எனக் காட்டிக் கொள்ள லென்ஸ் மாமா, வேறு கதைகளைச் சொல்ல... சே... ரொம்ப இலக்கிய - இலக்கணத் தரமாகி விட்டது சந்திப்புகள்.
"திங் டாங்'குகளை வைத்து முக்கியப் பிரச்னைகளுக்கு, "ஹை லெவல் கமிட்டி' அமைத்து, விவாதிக்க வைக்கிறது அரசு. அந்தக் குழுவில் இருப்பவர்கள், தம் வாதப் பிரதிவாத, மேதா விலாசங்களைக் காட்டி விவாதித்துக் கொண்டு இருப்பரே தவிர, தீர்மானமான முடிவுக்கு வர மாட்டார்கள்... "அணுகுண்டு தயாரித்தே ஆக வேண்டும்...' என்றோ, "வேண்டவே வேண்டாம்...' என்றோ தீர்மானிக்காது, நம் அரசுகள் அமைக்கும் உயர்மட்ட கமிட்டிகள்...
அதுபோல தான், குப்பண்ணா வரவுக்குப் பின், விவாதங்கள் ஆகி விட்டது. லென்ஸ் மாமா தொடர்ந்தார்...
சென்னை கேளம்பாக்கத்தில் வி.டி.பொன்னுசாமி என்று ஒரு பழம்பெரும் ஈ.வெ.ரா., தொண்டர் இருந்தார். ஊருக்குள் பெரிய நிலச் சுவான்தாரராக இருந்தாலும், ஈ.வெ.ரா.,விடம் அவருக்கு அப்படியொரு பக்தி. வீட்டில் எந்த ஒரு விசேஷத்துக்கும், ஈ.வெ.ரா.,வைக் கலந்து கொள்ளாமல் முடிவெடுக்க மாட்டார்.
அவரது மூன்று பெண்கள், இரண்டு பையன்களுக்கு பெயர் வைத்தவர் ஈ.வெ.ரா., தான். அவரது கடைசி மகனுக்கு, ஈ.வெ.ரா., முதலில் வைத்த பெயர்: ராவணன்.
பையனைப் பள்ளியில் சேர்க்கச் செல்லும் வரை, அவனுக்கு ராவணன் என்ற பெயர் தான் புழங்கியது; அப்புறம் தான் சிக்கல். பள்ளி நிர்வாகத்தினர், "பையன் பெயரை மாற்றினால் தான், பள்ளியில் சேர்த்துக் கொள்வோம்; ராவணனைச் சேர்க்க மாட்டோம்!' என்று கூறி விட்டனர்.
அதிகாரமோ, அரசியல் செல்வாக்கோ பயன் தராத காலம் அது. தி.க., தொண்டர் பொன்னுசாமி, "ஈ.வெ.ரா., வைத்த பேரை மாற்ற வேண்டும் என்றால், அவர் தான் மாற்ற வேண்டும்...' என்று, ஈ.வெ.ரா.,விடமே சென்று முறையிட்டார். சற்றும் தயங்காமல், "சரி... தசக்ரீவன் என்று மாற்றி வைத்துக் கொள்ளச் சொல்!' என்று கூறி, அனுப்பி விட்டார் ஈ.வெ.ரா.,
தொண்டர் திரும்பி வந்து, "சரி... என் பையனுக்கு தசக்ரீவன் என்று பெயர் மாற்றியாயிற்று. இப்போது சேர்த்துக் கொள்வீர்கள் தானே?' என்று கேட்டார். நிர்வாகத்தினரும் தடை சொல்லாமல் சேர்த்துக் கொண்டனர்.
இருந்தாலும் தொண்டருக்கு மனசாறவில்லை. ஈ.வெ.ரா.,விடம் வந்து மன்னிப்பு கோரும் தோரணையில், "ஐயா... நீங்க வச்ச பேரை நீங்களே மாத்தும்படி பண்ணிட்டேனே...' என்று வருந்தினார்.
ஈ.வெ.ரா., சிரித்துக் கொண்டே, "நான் எங்கய்யா மாத்தினேன்? தமிழில் ராவணன்; வடமொழியில் தசக்ரீவன். இது, உனக்குத் தான் தெரியலேன்னா... அவனுகளுக்கும் தெரியல பாரு!' என்று கொக்கரித்தார், என முடித்தார்.
***
மத்திய அரசு அலுவலகம் அது. இது போன்ற அரசு அலுவலகங்கள் என்றாலே, சந்தை மடம் போன்றது தான் என்பது உங்களுக்கு தெரியாதா?
சென்ட்ரல் எக்சைஸ், வருமானவரி, கஸ்டம்ஸ் என, மத்திய அரசு அலுவலகங்களை உங்களில் பலர் பார்த்து அவற்றில் அனுபவப்பட்டு, அவஸ்தைப்பட்டு இருக்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு அலுவலகம்... மத்திய அமைச்சர் ஒருவரின் பார்வையால், பந்தாடப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட அலுவலகம்...
புதிதாக வந்து சேர்ந்தார் ஒரு அதிகாரி. "பியூன்' போன்றவர்களிடம் மிகக் கண்டிப்போடு நடந்து கொண்டு, தன் அதிகாரத் தோரணையை வெளிப்படுத்துபவர்.
அவரிடம், "பியூன்' ஆக மாட்டிக் கொண்டவருக்கு, இந்த அதிகாரங்கள், பந்தாக்கள் பிடிக்கவில்லை. அவர், மூன்று தலைமுறை சென்னைவாசி...
"வேறு அதிகாரியின் கீழ் பணிபுரிகிறேன்... இவரிடமிருந்து என்னை மாற்றி விடுங்கள்...' என, எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்.
நடக்கவில்லை; மாறுதல் கிடைக்கவில்லை. பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்; 
அதற்கான சந்தர்ப்பமும் வந்தது.
அன்று, அதிகாரியின் சம்சாரம் ஊரில் இல்லையோ, உடம்பு சரி இல்லையோ தெரியவில்லை... மதிய உணவு எடுத்து வரவில்லை அவர்.
லஞ்ச் இன்டர்வெல் வந்தது. மணி அடித்து, "பியூனை' கூப்பிட்டார். நூறு ரூபாய் நோட்டை கொடுத்து, "தயிர் சாதம் வாங்கிட்டு வாப்பா...' என்றார்.
உஷாரானார் பியூன்.
"சார்... தயிர் சாதம் மட்டும் போதுமா? பக்கடா... சேவு ஏதும் வேணுமா?' எனக் கேட்டு இருக்கிறார்.
"வேணாம்...' என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி இருக்கிறார் அதிகாரி.
"பியூன்' விடாப்பிடியாக, "சார்... தயிர் சாதம் மட்டும் போதும் தானே...' என, மீண்டும் கேட்டு இருக்கிறார்.
எரிச்சலடைந்த அதிகாரி, "யோவ்... ஒருவாட்டி சொன்னா புரியாது... போய் தயிர் சாதம் வாங்கிட்டு வான்னா, வாங்கிட்டு வர வேண்டியது தானே...' என விரட்டவும், உற்சாகமாக புறப்பட்டு இருக்கிறார் பியூன்.
ஓட்டலுக்குப் போய் திரும்ப வந்தவரின் இரண்டு கையும் கொள்ளாத அளவு தயிர் சாதப் பொட்டலங்களை வாங்கி வந்து இருக்கிறார்.
அதிகாரி வெலவெலத்துப் போய், "என்னப்பா இது?' என்று கேட்டு இருக்கிறார்.
"தயிர் சாதம் சார்... நீங்க தானே தயிர் சாதம் மட்டும் போதும்ன்னீங்க... நானும் பல தபா, தயிர் சாதம் மட்டும் போதுமான்னு கேட்டேன்ல்ல... அதான், தயிர் சாதம் மட்டும், நூறு ரூபாய்க்கு வாங்கியாந்துட்டேன்...' என, அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, உடனே கிடைத்தது, 
"டிரான்ஸ்பர்!' அது மட்டுமா, அலுவலகத்தில் உள்ள பலருக்கு, வீட்டு சாப்பாட்டுடன், ஓட்டல் தயிர் சாதமும் இலவசமாக அன்று கிடைத்து இருக்கிறது! 
*** 

1 comment:

  1. எப்படி இவ்வளவு நாள் உங்களுடைய தளத்தை மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை... சைடு பாரில் உள்ள சைடு டிஷ்கள் அனைத்தும் கலக்கலாக உள்ளன...

    ReplyDelete