தற்போது வெளியாகும் திரைப்படங்கள் ஒரு வாரம் அல்லது 2 வாரம்தான் ஓடுகிற நிலை, ஆனால் கோ படம் 15 நாட்களுக்கும் மேலாக ஓடுகிறது, என்று சந்தோஷப்பட்டார் நடிகர் ஜீவா.

கேவி ஆனந்த் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கோ படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் முன்தோன்றி, நடிகர் ஜீவா உற்சாகப்படுத்தி வருகிறார். சேலத்தில் இப்படம் ஓடுகிற ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் நேற்று இரவு 8-30 மணிக்கு ரசிகர்கள் முன்பு கதாநாயகன் ஜீவா, துணை நடிகர் அஜ்மல் ஆகியோர் தோன்றினார்கள்.

ரசிகர்கள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள் மத்தியில் அவர் பேசுகையில், "ராம், ஈ ஆகிய படங்களுக்கு பின்னர் கோ படத்திற்காக சேலம் வந்துள்ளேன். தற்போது வெளியாகும் திரைப்படங்கள் ஒரு வாரம் அல்லது 2 வாரம் தான் ஓடுகிற நிலை, ஆனால் கோ படம் 15 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களாகிய உங்களின் ஆதரவுடன் வெற்றிக்கரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.தொடர்ந்து இப்படம் ஓட ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், கோ படம் என் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தைத் தந்துள்ள படம். குறிஞ்சிப்பூ மாதிரி அரிதாகத்தான் இந்த மாதிரி படங்கள் என்னைப் போன்றவர்களுக்கு அமையும். இதில் பத்திரிகைப் புகைப்படக்காரராக நடித்தது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.