சென்னை: இரவு பகல் என்றும் பாராமல் அவர் அழைத்த போதெல்லாம் ஓடிப் போய் கட்சிப் பணியாற்றிய எனக்கு, நன்றிக் கெட்டத்தனமாக தொடர்ந்து துரோகம் செய்து வரும் தங்கபாலுவுக்கு என்னைக் கட்சியை விட்டு நீக்க எந்த அதிகாரமும் இல்லை என்று முன்னாள் சென்னை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கராத்தே தியாகராஜனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு கட்சியை விட்டு நீக்கினார். மேலும் அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் ஒரே காரில் சென்னை விமான நிலையம் சென்ற கராத்தே அவரை டெல்லிக்கு வழியனுப்பி வைத்தார்.

பின்னர் கராத்தே தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், பொல்லாத காலத்தில் புடலங்காயும் பாம்பாகும் என்பார்கள். அது போல ஆகி விட்டது தங்கபாலுவின் நிலை. மயிலாப்பூர் தொகுதியில் மரண அடி நிச்சயம் என்பதை வாக்குப்பதிவின் முடிவில் உணர்ந்து கொண்ட தங்கபாலு, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று தனது ஆணிவேரை தானே அறுக்கும் அபாயகரமான செயலில் இறங்கியிருக்கிறார்.

நான் மற்றும் எஸ்.வி.சேகர் உள்பட 18 பேர் கட்சி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்திருக்கிறார். அன்னை சோனியா காந்தியின் ஒப்புதலுடன் கட்சிப் பணியாற்றி வரும் என்னை சமீப காலங்களில் அதிக அளவு கட்சிப் பணிகளில் பயன்படுத்திக் கொண்டவர் தங்கபாலு.

இரவு பகல் என்றும் பாராமல் அவர் அழைத்த போதெல்லாம் ஓடிப் போய் கட்சிப் பணியாற்றிய எனக்கு, நன்றிக் கெட்டத்தனமாக தொடர்ந்து துரோகம் செய்து வரும் தங்கபாலுவுக்கு என்னைக் கட்சியை விட்டு நீக்க எந்த அதிகாரமும் இல்லை. அதற்கான தகுதியும் இல்லை. மேலும் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதல் பெறாமல், தென்சென்னை மாவட்டத் தலைவர் மங்கள் ராஜ், சென்னை மாநக ராட்சி கவுன்சிலர் சாந்தி, மற்றொரு கவுன்சிலர் மாநில எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு காங்கிரஸ் தலைவர் செங்கை செல்லப்பா ஆகியோரையும் எவ்வித விளக்க நோட்டீசும் அளிக்காமல் தன்னிசையாக கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்திருக்கிறார்.

இதைவிட பெரிய கேலிக்கூத்து என்னவென்றால், இளந்தலைவர் ராகுல் காந்தியின் ஆணைப்படி முறையாக தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான தென் சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் ஜி.பிரகாஷ், மயிலாப்பூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயசேகர், மத்திய சென்னை தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரஞ்சன்குமார், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரஞ்சித்குமார், ஈரோடு பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ், ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொதுச் செயலாளர் சக்திவேல், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜவஹர்பாபு உள்பட பலரை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்.

இது அவரது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாகும். சட்டப்படி இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களில் தலையிட காங்கிரஸ் கட்சியின் எந்த மாநிலத் தலைவர்களுக்கும் உரிமையில்லை என்பதை மறந்து அத்துமீறி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் துரோகி தங்கபாலு போகிற போக்கில் தனது சுய விருப்பு வெறுப்புகளைக் காட்டி கொண்டிருக்கிறார் என்பது இதன் மூலம் வெளிப்படையாக தெரிகிறது.

எனவே நாங்கள் இதுபற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை. இந்த “உடான்ஸ்” அறிவிப்பை பொருட்படுத்தப் போவதும் இல்லை. தண்ணீரிலேயே மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் தங்கபாலுவை தரையில் தூக்கி எறியும் வரை ஓயப் போவதுமில்லை.

தகிடுதத்த தங்கபாலுவை காங்கிரஸ் தலைவர் பதவி யிலிருந்து விரட்டியடித்து அவரது “குறிச்சி” கிராமத்தில் ஓய்வு பெறச் செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்