சினிமாவில் அடிவாங்கி காமெடி பண்ணும் வடிவேலு நிஜத்தில் அரசியலில் அடி வாங்குற நேரம் வந்துடுச்சி என்று நடிகை விந்தியா கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்.


நடிகர் வடிவேலு, விஜயகாந்தைப் பற்றி ஏக வசனத்தில் பேசி பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரத்தை கட்சி பாகுபாடு இல்லாமல் ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்து சிரிக்கிறார்கள். வடிவேலுவின் பிரசாரம் மக்களை எளிதில் சென்று வருவதாலோ என்னவோ ஆளும்கட்சி தொலைக்காட்சிகளில் வடிவேலு பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதுஒருபுறம் இருக்க, திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விந்தியா பிரசாரத்தில் குதித்துள்ளார். நேற்று அவர் ‌பிரசாரத்தின்போது பேசுகையில், வடிவேலு ஒரு காமெடி பீஸ். அவரால திமுகவும் இப்போ காமெடி பீஸா தெரியுது. திமுககிட்ட எவ்வளவு வாங்குனாரோ தெரியல. வாங்குனதுக்கு வஞ்சமில்லாம பேசிக்கிட்டு திரியறாரு. இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை. மக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். பொதுவா சினிமாவில் வடிவேலு அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல. இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு, என்றார்.