தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அவதூறாகவும், கண்ணியமில்லாமலும் பேசியதற்காக காமெடி நடிகர் வடிவேலு மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் திருவாரூரில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அத்தனை பேர் முன்னிலையில் மகா மோசமாக பேசினார் வடிவேலு. விஜயகாந்த்தை பழி தீர்த்துக் கொள்ள மைக் கிடைத்து விட்டதே என்ற வேகத்தில் பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை கண்ணியம் கூட இல்லாமல் விஜயகாந்த்தை ஒருமையில் விளித்தும், லூஸு என்று கூறியும், பொறுப்பற்றதனமாக பேசினார் வடிவேலு.
முகம் சுளிக்க வைக்கும் வகையில் வடிவேலு பேசியது குறித்து தேமுதிக உயர் மட்டக் குழு உறுப்பினர் திலீப்குமார் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பினார்.
அந்தப் புகாரில், அதில் எங்கள் தலைவர் விஜயகாந்தை பற்றி நடிகர் வடிவேலு தரக்குறைவாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் பேசி பிரசாரம் செய்துள்ளார். இது தனியார் டி.வி.க்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தனி ஒருவரை பற்றி அவதூறாக தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து வடிவேலு மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி திருவாரூர் போலீஸார் தற்போது வடிவேலு மீது அவதூறாக விமர்சிப்பது, தரக்குறைவாக பேசுவது, தனிநபரை இழிவாக பேசுவது ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இதேபோல வடிவேலு பேசினால் அவர் கூட்டங்களில் பேசுவதற்குத் தடை விதிக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது.
மறுபடியும் சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு!
இதற்கிடையே திமுக ஆதரவு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், மீண்டும் விஜயகாந்த்தை படு மோசமாக விமர்சித்துப் பேசியுள்ளார் வடிவேலு. கடந்த முறை லூஸு என்று கூறிய வடிவேலு இந்த முறை விஜயகாந்த்தை பீஸு என்று வர்ணித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் வடிவேலு பேசியிருப்பது
அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு, நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம். என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு ன்னு சொல்லுறார்.
நான் சொன்னேன். எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது. கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு.
அவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க.என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும்.
ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா.
விருத்தாசலத்தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற. நீ உண்மையான ஆம்பளயா இருந்தா? மனுசனா இருந்தா? நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும் மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற.
டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும் குறிப்பா நான் விடமாட்டேன்.
ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்…ம்..ம்..ங்குற.. இப்படியே முக்குறியே. முக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு.
நாகரிகம் தெரியாத ஒரு ஆள். அவரை சேர்த்துக்கிட்டு அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பிச்சிடுச்சு.
விருத்தாசலம் அப்பாவி மக்கள் சினிமாவுல சண்டை போடுறத எல்லாம் பார்த்துட்டு நம்மையும் காப்பாத்துவாருன்னு அவசரப்பட்டு ஏமாந்து ஓட்ட போட்டிடுச்சுங்க.
இன்னைக்கு ஒரு மேடையில பேசியிருக்கிறாரு… நல்லது செய்யனும் நல்லது செய்யலன்னா யாராக இருந்தாலும் விடமாட்டேன்னு பேசியிருக்கிறாரு. என்ன கணக்கு? ஒண்ணுமே புரியல? சேர்க்கை சரியில்ல; அந்த கூட்டணியில சேர்க்கை சரியில்லை அவ்வளவுதான். ஒரு மாதிரியான கூட்டம் அது.
இப்ப என்ன நீ ஜெயிச்சுட்டேன்னு 41 சீட்டு வாங்கியிருக்க. இந்த பீஸூ பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க. கலைஞர் பேச்சைத்தான் பேசுவாங்க என்று வாய் போன போக்கில் பேசியுள்ளார் வடிவேலு.