சென்னை: தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்காததாலும், விரும்பிய தொகுதிகளை வாங்கவுமே '3வது அணி' என்ற மிரட்டல்  நாடகத்தை தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட நடத்துவதாகத் தெரிகிறது.

இந்த நெருக்குதலுக்கு ஜெயலலிதா பணிந்து வந்தால் 3வது அணி என்ற யோசனையை தூக்கி தூரப்போட்டு விட இந்த தலைவர்கள் தயாராக உள்ளனர். ஒருவேளை ஜெயலலிதா பணியாவிட்டால் 3வது அணி குறித்து இவர்கள் தீவிரமாக சிந்திப்பார்கள் என்று தெரிகிறது.

தனி அணி அமைத்தால் வைகோவை உடன் சேர்த்துக் கொள்வது என்ற முடிவிலும் இவர்கள் உள்ளனர். அதிமுகவுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டால் வைகோவை இவர்கள் மறந்துவிடுவர். அதாவது, ஜெயலலிதாவைப் போலவே, இவர்களும் வைகோவை ஒரு ஊறுகாய் போல பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

திடீரென நேற்று இரவு 160 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக. அதில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம்  , மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் கோரிய தொகுதிகளும் இருக்கவே கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுமே கடும் அதிர்ச்சி அடைந்தன.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்  இன்று காலை தனது கட்சியினரோடு அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இருப்பினும் இதில் ஒரு முடிவுக்கு வர அவர்களால் முடியவில்லை. கூட்டணி என்ற கான்செப்டுக்கு வந்தாகி விட்டது. இனிமேல் தனித்துப் போட்டியிடுவது என்பது தற்கொலைக்குச் சமமானது என்பதால் கூட்டணியில் நீடிப்பதே நல்லது என்ற யோசனையை கட்சி நிர்வாகிகள் பலரும் கூறினார்கள் என்கிறார்கள்.

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன், பார்வர்ட் பிளாக் தலைவர் பா.கதிரவன் ஆகியோர் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் இவர்கள் அனைவரும் தேமுதிக அலுவலகத்துக்குச் சென்று விஜய்காந்துடன் ஆலோசனை நடத்தினர். அப்போதும் இவர்களால் ஒரு திடமான முடிவுக்கு வர முடியவில்லை என்று தெரிகிறது.

அதேசமயம், இந்த தலைவர்களின் இந்த திடீர் கூட்டம், பரபரப்பு பேச்சு, அங்கும் இங்கும் விரைந்தது ஆகியவையெல்லாம் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு நெருக்கினால், 3வது அணி அமைப்போம் என்று சாடை மாடையாக கூறினால், அதிமுக இறங்கி வரும் கேட்ட தொகுதிகளைக் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்தத் தலைவர்கள் இவ்வாறு ஓடியாடி வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக பணியாவிட்டால் 3வது அணி அமைப்பது அப்போது வைகோவையும் உடன் சேர்த்துக் கொள்வது, ஜெயலலிதா இறங்கி வருவதாக தெரிந்தால் 3வது அணியை கிடப்பில் போட்டு விடுவது, வைகோவையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது என்ற ஐடியாவில் இவர்கள் இருப்பதாகவும் தெரிகிறது.