தமிழ்த் திரையுலகில் கோலாகலங்களுக்கு இணையாக கலாட்டாக்களுக்கும் பஞ்சமிருக்காது.

2010ல் பல முக்கியத் திருமண வைபவங்களை தமிழ்த் திரையுலகம் சந்தித்தது. அதேபோல சில கலாட்டாக் கல்யாணங்களையும் கண்டது.

2010ல் நடந்த திரையுலக திருமணத்திலேயே அதிகம் பேசப்பட்டது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யாவின் திருமணம்தான். அஸ்வினுக்கும், செளந்தர்யாவுக்கும் சென்னையில் படு கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் திரையுலகமே திரண்டு வந்து பங்கேற்றது. முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.

அதேபோல திரையுலக கனவு தேவதை ரம்பாவின் திருமணமும் வெகுவாக பேசப்பட்டது. கனடாவைச் சேர்ந்த ஈழத் தமிழரான இந்திரனை மணந்தார் ரம்பா.

இதேபோல நடிகை நவ்யா நாயருக்கும், தொழிலதிபர் சந்தோஷ் மேனனுக்கும் திருமணம் நடந்தது. சிந்து மேனன், பிரபுவை மணந்தார். வெண்ணிலா கபடிக் குழு ஹீரோ விஷ்ணு, நடிகர்-இயக்குநர் நடராஜின் மகள் ரஜினியை மணந்தார்.

நடிகர் பாலா, கேரளத்து அமிர்தாவை மணந்தார். ஸ்ரீதேவிகாவுக்கும், ரோஹித் ராமச்சந்திரனுக்கும் திருமணம் நடந்தது.

இதுபோக சில கலாட்டா கல்யாணங்களையும் கண்டது திரையுலகம்.

தனது காதல் மனைவி லலிதா குமாரியை விவாகரத்து செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், அதே சூட்டோடு தான் காதலித்து வந்த போனி வர்மாவை இந்த ஆண்டு மணந்து கொண்டு புதுக் குடித்தனத்தை ஆரம்பித்தார்.

நீண்ட காலம் காதலித்து மணந்து கொண்ட நடிகை சோனியா அகர்வாலும், இயக்குநர் செல்வராகவனும் பிரிந்தனர். இதற்குப் பின்னர் புதிய காதலில் விழுந்தார் செல்வராகவன். அவர் சினிமாத் துறையைச் சாராதவர் என்று சமீபத்தில்தான் அவர் அறிவித்தார்.

தனது முதல் மனைவி பிரச்சினை செய்து வருவதாகவும், பெயரைக் கெடுக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார் நடிகர் ராஜ்கிரண்.

நடிகை மீரா வாசுதேவனுக்கும், அவரது கணவர் விஷாலுக்கும் விவாகரத்து கிடைத்தது. இது கிடைத்த சூட்டோடு, மலையாள வில்லன் நடிகர் ஒருவருடன் காதலில் மூழ்கி விட்டார் மீரா.

முதல் மனைவிக்கு மாதாமாதம் ரூ. 15,000 ஜீவனாம்சம் தர வேண்டும் என்று இயக்குநர் பேரரசுவுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

ஒரு காலத்தில் காதல் இளவரசனாக இளம் பெண்களால் பார்க்கப்பட்டு, ரசிக்கப்பட்ட அரவிந்தசாமி தனது மனைவி காயத்ரியைப் பிரிந்தார்.

இந்த ஆண்டின் உச்சகட்ட பரபரப்பு பிரபுதேவா, நயனதாரா காதல்தான். இந்தக் காதலில் சிக்கித் தவித்தவர் மனைவி ரமலத். ஆனால் பிரபுதேவாவின் தொடர் நெருக்குதலை சமாளிக்க முடியாமல் அவரும் விவகாரத்துக்கு உடன்பட்டு விட்டார்.

2010ல் தமிழ் சினிமா பல நல்ல விஷயங்ளையும், அதே அளவிலான சோகங்கள், நெருக்கடிகள், குழப்பங்களையும் சந்தித்தது என்றால் மிகையில்லை