ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வன்னியர்கள் பா.ம.க.,விற்கு ஓட்டு போடுங்கள் என டாக்டர் ராமதாஸ் பேசினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் பா.ம.க., சார்பில் நடந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி கூட்டத்தில் அவர் பேசியதாவது:தீபாவளி, பொங்கல் வந்தால் டாஸ்மாக் கடையில் போன வருஷம் 100 கோடி விற்றது, இந்த ஆண்டு 150 கோடி விற்றது என்ற செய்தி வருகிறது. எந்த பண்டிகையாக இருந்தாலும் பண்டிகைக்கு மூன்று நாள் எல்லா மது கடைகளையும் மூட வேண்டும்.டாஸ்மாக் கடையை பார்க்கும் போது மதுகுடிப்பவன் சீக்கிரமாக இறந்து விடுவானே என வருந்துகிறேன். சிகரெட் பிடிப்பதையும், புகையிலை போடுவதையும் பார்க்கும்போது புற்று நோயால் இறந்து விடுவானே என வேதனைப்படுகிறேன்.அன்புமணி ராமதாஸ் 2008ம் ஆண்டு அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். பொது இடத்தில் யாரும் புகை பிடிக்க கூடாது என்பது அந்த சட்டம். யாரும் நினைக்காததை ஒரே ஒரு ஜீவன், ஒரே ஒரு ஆத்மா அன்புமணி ராமதாஸ் தான் இதை நினைத்தார்.


இங்கே பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள் அதிகம் வந்துள்ளீர்கள். நீங்கள் டாக்டர், கலெக்டர், இன்ஜினியர், எஸ்.பி., நீதிபதியாக வர வேண்டும். குறிப்பாக பெண்கள் வர வேண்டும் என நான் கனவு காண்கிறேன்.இதற்கு பா.ம.க., ஆட்சிக்கு வர வேண்டும். பா.ம.க., ஆட்சிக்கு வருவதற்கு வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக ஓட்டு போட வேண்டும். அப்படி போட்டால் 100 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயித்து விடலாம். இதன் பிறகு 17 எம்.எல்.ஏ., தேவை, அவர்கள் தானாக வருவார்கள்.இன்றைக்கு யார் கட்சி ஆரம்பித்தாலும் வன்னியரை கொடி பிடிக்க கூப்பிடுகின்றனர். இவர்கள் தான் இளிச்சவாயர்கள். இதை மாற்ற பாடுபட்டு வருகின்றேன். பா.ம.க., ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் இளைஞர்கள், இளம்பெண்கள் எப்போது மாம்பழத்திற்கு ஓட்டு போடுகின்றீர்களோ அப்போது பா.ம.க., ஆட்சிக்கு வரும்.


63 வருட சுதந்திர நாட்டில் வறுமை ஒழிந்திருக்க வேண்டும். ஆனால் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆனான், ஏழை மேலும் ஏழையானான்.முன்னேறிய மேல்தட்டு மக்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர். சுதந்திரம் பெற்றதும் இலவச கல்வி கொடுத்திருந்தால் எல்லோரும் படித்திருப்பார்கள். வன்னியர்களில் பஸ் ஓனர், நகைக்கடை, ஜவுளிக்கடை, சினிமா கொட்டகை, பெரிய லாட்ஜ், கல்லூரி உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் யாரும் இல்லை.முட்டி கால் சேற்றில் மண்ணை கிளறி நாள் முழுவதும் நடவு நட்டு, களை எடுத்து, விளைந்ததும் அறுவடை செய்யும் மண்ணை கிளறுபவர்கள். நாம் மண்ணில் கை வைக்க வில்லை என்றால் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியாது. நாம் முன்னேற வில்லை. யார், யாரோ முன்னேறுகின்றார்கள்.


பொருளாதார ரீதியாகவும், சமூக நீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் முன்னேற வில்லை. அரசியல் ரீதியாக நாம் முன்னேற தமிழகத்தை ஆண்டால் தான் முடியயும். ஒட்டு மொத்த வன்னியர்களும் பா.ம.க.,விற்கு வர வேண்டும். வன்னியர்கள் ஓட்டு போட்டால் 100 பேர் ஜெயிக்கலாம். யார் பணம் கொடுத்தாலும் உனக்கு தான் ஓட்டு என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் ஓட்டை பா.ம.க.,விற்கு போட வேண்டும். அப்போது தான் அடுத்த தேர்தலில் வன்னியர்களை நம்ப கூடாது என அவர்கள் ராமதாஸ் பின்னால் தான் இருக்கின்றனர் என இருப்பார்கள். ஒரு லட்சம் ஓட்டு வாங்கி மயிலம் தொகுதியில் ஜெயிக்க வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்